பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்: விபரங்களை சேகரிக்கும் டில்லி மேலிடம்
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பணிகளை முடக்கும் வகையில் செயல்படும் அரசு அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்கும் பணியில், அக்கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையாக பா.ஜ.,வும் பல கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்துள்ளது. பிரசாரத்தில் வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, அனைவரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில், மத்திய அமைச்சர் முருகன் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதிகளவில் தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் மீது போலீசார், தடியடி நடத்தினர்.
அதில், பெண்கள், முதியவர்கள் என, பலர் காயம் அடைந்தனர். மாவட்ட எஸ்.பி.,யை மாற்றக் கோரி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
தி.மு.க., தலைவர்கள், 'தி.மு.க., - அ.தி.மு.க., இடையில் தான் போட்டி; பா.ஜ., இரண்டாவது இடத்திற்கு வரக்கூடாது' என, பிரசாரத்தில் பேசி வருகின்றனர். அ.தி.மு.க., தலைவர்களும், '3 சதவீத ஓட்டுள்ள உள்ள கட்சி; தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு தான் போட்டி' என்று கூறுகின்றனர்.
பிரதமர் மோடியை, தி.மு.க.,வினர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கின்றனர்.
அவ்வாறு பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இரு கட்சியினரும் சேர்ந்து பா.ஜ.,வினரை தேர்தல் பிரசாரம் செய்யவிடாமல் இடையூறு செய்கின்றனர். அதற்கு, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகளும் உடந்தை. அவர்கள், பா.ஜ., வேட்பாளர்கள் மீது வழக்கு தொடர்வது, பா.ஜ.,வினரின் வாகனங்களை அடிக்கடி சோதனை செய்வது என, பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர்.
இந்த தகவல்களை டில்லியில் உள்ள கட்சி மேலிட தலைவர்களின் கவனத்திற்கு தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர். சில பா.ஜ., நிர்வாகிகள், தற்போதைய நடவடிக்கைக்கு பயந்து அதிகாரிகளை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அமைதியாகி விடுகின்றனர்.
எனவே, பா.ஜ.,வுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்படும் தமிழக அதிகாரிகள் யார், அவர்களின் பின்னணி உள்ளிட்ட விபரங்களை கட்சி மேலிடம் தீவிரமாக சேகரித்து வருகிறது. இந்த பணி ரகசிய பணி என்பதால், பிற மாநிலங்களை சேர்ந்த கட்சியினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர, கட்சியின் சட்டப்பிரிவினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதனால், பா.ஜ.,வினரிடம் தாறுமாறாக நடந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு தேர்தல் முடிந்த பின்பும் சிக்கல்கள் எழும். இதற்காகவே, திட்டமிட்டு செயல்படுகிறது பா.ஜ.,
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
'போட்டோவுக்கு போஸ்' கொடுக்கும் பா.ஜ.,வினர் யார்?
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கருதப்படும் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, பொள்ளாச்சி உட்பட, 13 தொகுதிகளில் ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பணிகளை பா.ஜ., துவக்கி விட்டது.
இந்நிலையில், பா.ஜ.,வில் தங்களுக்கும் மற்றும் தங்களின் ஆதரவாளர்களுக்கும், 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளும்; அ.தி.மு.க., உடன் நட்பில் உள்ள நிர்வாகிகளும் பிரசார பணிகளில் சரிவர ஈடுபடுவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.
அவர்கள் சில இடங்களில் துண்டறிக்கை வழங்கி, அதை போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின், கிளம்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, தேர்தல் பணியில் முழு ஈடுபாடு காட்டாமல் 'போட்டோ'வுக்கு மட்டும் 'போஸ்' கொடுக்கும் நிர்வாகிகளின் விபரங்களை, பா.ஜ., மேலிடம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது, தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து