'திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுப்போம்': சிறுத்தைகளுக்கு பன்னீர்செல்வம் எச்சரிக்கை
கடந்த லோக்சபா தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் என இரு தனித் தொகுதிகளை வாங்கி, தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, இம்முறை மூன்று தொகுதிகளை கேட்டு தி.மு.க., தரப்புடன் மல்லுக்கு நின்றது. கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவுக்காக கள்ளக்குறிச்சி தொகுதியை கேட்டு, கடைசி வரை போராடினர்.
திருமாவளவனை தலைமைச்செயலகம் வரவழைத்து ஸ்டாலின் உருக்கமாக பேசியதும், இரு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால், தி.மு.க., தரப்பு தங்களை ஏமாற்றி விட்டதாகவே வி.சி., தொண்டர்கள் கடும் எரிச்சலில் உள்ளனர். இப்படி எரிச்சலில் உள்ளவர்கள், மற்ற தொகுதிகளில் நம் வேட்பாளருக்கு எப்படி உழைப்பர் என தி.மு.க.,வினர் சந்தேகத்தில் உள்ளனர். இவ்விதம் இருதரப்பு சந்தேகத்தாலும், எரிச்சலாலும், தேர்தல் பணிகளில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தர்மபுரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தர்மபுரி தி.மு.க., அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
கதவுகளை பூட்டி...
தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., - வி.சி., உட்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தர்மபுரி தி.மு.க., வேட்பாளர் மணியை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தவிர, மற்ற அனைவரையும் வெளியேற்றி, அரங்கத்தின் கதவுகளை உள்பக்கம் பூட்ட உத்தரவிட்டார்.
அதன் பின், அவர் பேசியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய தாவது:
தர்மபுரி மாவட்டத்தில் வி.சி., நிர்வாகிகள், தி.மு.க., வேட்பாளருக்கு பிரசாரம் செய்து, ஓட்டுகளை பெற்றுத்தர வேண்டும். கூட்டணி என்பதால் யாருக்கும் பணம் கொடுக்க முடியாது. அதற்காக, நீங்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டால், உங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில், நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டியிருக்கும்.
தொடரக்கூடாது
கடந்த சட்டசபை தேர்தலில் அரூர் - தனி தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சியான மா.கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, வி.சி., நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்து, அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டனர். அதனால், அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் எளிதாக வெற்றி பெற்றார். அந்நிலை இத்தேர்தலில் தொடரக்கூடாது. மீறி தொடர்ந்தால், விளைவுகளை கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்து பேசியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அமைதியாக வெளியே வந்த வி.சி., நிர்வாகிகள், 'தேர்தலில் நல்ல கவனிப்பு இருக்கும் என வந்தோம்; அமைச்சர் வச்சு செஞ்சிட்டார்' என புலம்பியபடி சென்றனர்.
வாசகர் கருத்து