பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி:10 பேரை நியமித்தார் பழனிசாமி
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., கூட்டணி சார்பில், ராமநாதபுரம் தொகுதியில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க வேண்டும் என்பதில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வேட்புமனு தாக்கல் துவங்கியதும், வாக்காளர்களிடம் பெயர் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரது பெயர் மற்றும் 'இன்ஷியல்' கொண்ட ஆறு பேரைசுயேச்சையாக களம் இறக்கினர்.
அ.தி.மு.க., சார்பில், தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக,. ஒவ்வொரு தொகுதியிலும், மூன்று முதல் எட்டு பேர் வரை நியமிக்கப்பட்டனர். ராமநாதபுரம் தொகுதியில், முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா, மகளிர் அணி இணை செயலர் கீர்த்திகா, மாவட்ட செயலர்கள் முனியசாமி, ரவிச்சந்திரன் என, ஏழு பேர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதுகுளத்துார் தொகுதி, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மலேஷியா பாண்டியன், அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவர் உடனடியாக, ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவருடன் முன்னாள் எம்.பி., நிறைகுளத்தான், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் சாமிநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்கள் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் சிதம்பரம் தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், விவசாயப் பிரிவு இணை செயலர் ராஜமாணிக்கம், வட சென்னை தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சீனிவாசன் ஆகியோர், கூடுதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து