கோபிநாத்திற்கு காத்திருக்கும் நெருக்கடி: தி.மு.க., ஓட்டு வங்கி காப்பாற்றுமா?
கிருஷ்ணகிரி வேட்பாளர் கோபிநாத், பல்வேறு உள்ளடி வேலைகள் செய்து தான் சீட் பெற்றார். ஆனால், அவரது கடந்த கால செயல்பாடுகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பத் துவங்கிஉள்ளன.
களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து, ஓசூர் காங்., முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
ஓசூரைச் சேர்ந்த முன்னாள் காங்., - எம்.எல்.ஏ., மனோகரனுக்கும், கோபிநாத்திற்கும் இடையே சுமுகமான நட்பு இல்லை.
கடந்த 2016 ஓசூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கோபிநாத்திற்கு ஆதரவு கொடுக்காமல், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மனோகரன்ஆதரவு கொடுத்தார்.
அதனால், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க ஓட்டுகள் அ.தி.மு.க., பக்கம் திரும்பியதால், கோபிநாத் தோல்விக்கு காரணமாக அமைந்தது. கோபிநாத் தற்போது லோக்சபா சீட் வாங்கி வந்துள்ளதால், அவருக்கு ஆதரவாக மனோகரன் தேர்தல் பணி செய்வது சந்தேகம் தான்.
மேலும், சிட்டிங்எம்.பி., செல்லக்குமாரிடம் இருந்து சீட்டை பறித்துள்ள கோபிநாத் மீது, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், செல்லக்குமாருக்கு ஆதரவாக கோபிநாத் தேர்தல் வேலை செய்யவில்லை.
அதனால், இத்தேர்தலில் செல்லக்குமார் ஆதரவாளர்கள் கோபிநாத்திற்கு ஆதரவாக தேர்தல் பணிக்கு செல்ல வாய்ப்பில்லை.
கோபிநாத் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்; அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாசும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒரே சமூகத்திற்குள் போட்டி உருவாகியுள்ளதால், அச்சமுதாய ஓட்டுகள் சிதறி விடும்.
இது கோபிநாத்திற்கு எதிராக திரும்பலாம். கடந்த எட்டு ஆண்டுகளில், ஓசூர் உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப் பகுதியில் காங்., கட்சி இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மெலிந்து விட்டது.
அக்கட்சி நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். கோபிநாத் முழுக்க முழுக்க, தி.மு.க., ஓட்டு வங்கியை நம்பித்தான் இருக்க வேண்டும். 2016 தேர்தலை போல் தி.மு.க.,வினர் தற்போது தேர்தல் பணியாற்ற தயாராக இல்லை. இது கோபிநாத்திற்கு நெருக்கடியை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து