நாலாபுறமும் எதிர்ப்பு நடுவுல கொஞ்சம் பிரசாரம்!

பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள், வேட்பாளர்களை பார்க்கவும், அவர்களின் பேச்சை கேட்கவும் மக்கள் திரளுவர். கூட்டத்தை கண்டதும் பேச்சாளர்களுக்கு உற்சாகம் பிறக்கும். 'எங்களுக்கு ஓட்டளித்தால் ஊரில் பாலாறும், தேனாறும் ஓடும்' என, தேனொழுக பேசுவர்; மக்களும் கை தட்டி ஆரவாரம் செய்வர். இதெல்லாம் அந்த காலம்.

இப்போது எல்லாமே ஏறுக்குமாறாக நடக்கிறது. பிரசாரத்திற்கு செல்வோர் யாராக இருந்தாலும், ஏன் முதல்வராக இருந்தாலும் கூட, மக்கள் நேருக்கு நேர் கேள்வி கேட்கின்றனர். கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்களை சமாளிக்க முடியாமல், பிரசாரத்தை பாதியில் முடிக்கும் நிலைக்கு பல முக்கியஸ்தர்களே ஆளாகி வருகின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது தகுதி உள்ளோருக்கு மட்டும் தான்பணம் என, ஆளும் தரப்பினர் கூறி விட்டனர். இந்த பாரபட்சத்தை பற்றி,முதல்வரிடம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய பூ விற்கும் பெண்மணிக்கு, எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. 'தேர்தல் முடிந்ததும், அனைவருக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என, ஓட்டு கேட்டு போன மொத்த பேரும் கோரஸாக கூறி நழுவிய காட்சி, வீடியோவாக சமூகத்தை வட்டமிடுகின்றன.

அடுத்ததாக, ஒரு முக்கிய கேள்வி. 'டாஸ்மாக் கடைகளை ஏன் மூடவில்லை' என்பதுதான். பெண்கள் கேட்கும் இக்கேள்விகளுக்கும், ஆளும் கட்சியினரிடம் பதில் இல்லை. காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடும்படி கூறிய பெண்களிடம், '2016 தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக கூறிய கருணாநிதிக்கு, நீங்கள் ஓட்டளித்தீர்களா' என, அமைச்சர் உதயநிதி எதிர் கேள்வி எழுப்பினார்.

'கடந்த 2021 தேர்தலில், இதே வாக்குறுதியை உங்கள் தந்தையும், நீங்களும், உங்கள் அத்தையும் தந்தீர்களே. அதை மறந்து விட்டீர்களா உதயநிதி' என, மக்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டி வருகின்றனர்.

உள்ளூர் பிரச்னை, கவுன்சிலர் அராஜகம், கட்சி கோஷ்டிகளின் மோதல் போன்ற விவகாரங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் கேள்விகளை சந்திக்க முடியாமல், தி.மு.க.,வும், அதன் கூட்டணி வேட்பாளர்களும், பிரசாரத்தில் தடுமாறவே செய்கின்றனர்.

மக்களை எதிர்கொள்ள முடியாமல் சிக்கலை சந்தித்த வி.ஐ.பி.,க்கள் எதிர்கொண்ட சம்பவங்கள்:

தென் சென்னை



இத்தொகுதி தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் பாரதிதாசன் நகர் பகுதியில் பிரசாரத்துக்கு சென்றபோது, அப்பகுதி மக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு, சரமாரி கேள்விகள் எழுப்பினர். 'எங்கள் குடியிருப்பில் உள்ள வீடுகள் பாதிப்படைந்து, பல காலமாகி விட்டன. யாரும் வந்து சரி செய்யவில்லை; எந்த வசதியும் செய்து தரவில்லை' என குரல் எழுப்ப, செய்வதறியாமல் திகைத்து நின்று பின் நழுவினார் தமிழச்சி.

வட சென்னை



தி.மு.க., வேட்பாளர் கலாநிதி, எண்ணுார் தாழங்குப்பம் சந்திப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ.,க்கள் சுதர்சனம், சங்கர் உடனிருந்தனர். தாழங்குப்பம் வந்ததும் முதல் வார்டு தி.மு.க., கவுன்சிலர் சிவகுமார், பிரசார வாகனத்தில் ஏற முயன்றார். அப்போது அப்பகுதி பெண்கள், 'அந்த கவுன்சிலர் எங்கள் பகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என கூறி வாக்குவாதம் செய்தனர்.

வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அவர்களை அங்கிருந்த பஜனை கோவிலுக்கு அழைத்து சென்று பேசி சமாதானப்படுத்தினர்.

மத்திய சென்னை



தி.மு.க., வேட்பாளர் தயாநிதி மாறன் பிரசாரத்துக்கு சென்றபோது, மக்கள் அவர் வாகனத்தை முற்றுகையிட்டு, கேள்விகள் எழுப்ப, அவர் கோபமடைந்து, 'நான் உங்களுக்காகத்தான் பேசுகிறேன், எனக்கா பேசுகிறேன்' என கத்த, கட்சியினர் அவரை சமாதானப்படுத்தினர்.

திருவள்ளூர்



திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில், காங்கிரஸ் வேட்பாளர்

சசிகாந்த் செந்திலை ஆதரித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஓட்டு கேட்டு சென்றபோது, 'எம்.எல்.ஏ.,வாகி என்ன செய்தீர்கள்' என, மக்கள் கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ., 'தம்பி நீ போகும் சாலை, நான் போட்டு கொடுத்தது. வேற எவனும் போடவில்லை' என்றார். தொடர்ந்து கேள்வி கேட்ட நபரை நோக்கி, 'யோவ் நீ இங்க வந்து கேளு. மேலே வந்து கேளு, நான் பதில் கூறுகிறேன். உனக்கு என்ன தெரியும்' என, ஒருமையில் பேச, மக்கள் ஆவேசமடைய, உடன் வந்தவர்கள் மக்கள் சமாதானப்படுத்த, பிரசார வாகனம் சட்டென அங்கிருந்து வேகம் எடுத்தது.

தேனி



தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் பிரசாரம் செய்தபோது, பெண்கள் 1,000 ரூபாய் வழங்கவில்லை என முறையிட்டனர். அவர்களிடம் பேசிய வேட்பாளர், '1,000 ரூபாய் கேட்டு, 1.50 கோடி பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 1.25 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஏன் வழங்கவில்லை என பரிசீலனை செய்யப்படுகிறது' என்றார். 'தேர்தல் முடிந்ததும் சத்தியமா நானே வந்து வாங்கி தருகிறேன்' என்று சொல்லி அவர் அங்கிருந்து நல்லபடியாக புறப்படுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம்.

திருநெல்வேலி



இத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முக்கூடல் பகுதிக்கு ஓட்டு கேட்டு சென்றார். அவரை கிராம மக்கள் முற்றுகையிட்டு, உரிமைத் தொகை குறித்து கேள்வி எழுப்பினர். 'கடந்த முறை ஓட்டு கேட்டு வந்தபோது, எல்லா மகளிக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும்' என்றீர்கள். 'இப்போது பாதி பேருக்கு வந்துள்ளது. மீதமுள்ளோருக்கு வரவில்லை. என்றைக்கு வரும்' எனக் கேட்க, 'எல்லாருக்கும் தேர்தல் முடிந்ததும் வந்து விடும்' எனக் கூறிய அமைச்சர் காரில் ஏறி பறந்தார்.

கரூர்



கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, தன் பதவி காலத்தில் தொகுதிக்குள் வராததால், எதிர்ப்பை சந்தித்து வருகிறார். கரூர் கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் தெருவிற்கு பிரசாரத்துக்காக சென்றபோது, ஆரத்தி எடுக்க நின்ற பெண்களில் ஒருவர், 'ஐந்து ஆண்டுகளாக உங்களை பார்க்கவில்லை. இப்போது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கிறீர்கள்' என கேட்க, பதில் கூற முடியாமல், அங்கிருந்து நழுவினார் ஜோதிமணி.

திருப்பூர்



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணை உள்ளது. அணைக்கு நீர் வேண்டும் என, அணையை சுற்றியுள்ள கிராமங்களில் கருப்பு கொடி காட்டி பலகட்ட போராட்டம் நடத்தியுள்ளனர். 'வராதே... வராதே... ஓட்டு கேட்டு ஊருக்குள் வராதே' என்ற வாசகங்கள் அடங்கிய, பேனர்களை போராட்டக்காரர்கள் வைத்தனர்.

நேற்று முன்தினம் மாலை, ஈரோடு லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ் உடன் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி, குண்டடம் அருகே தேர்பாதை என்ற இடத்துக்கு சென்றபோது, விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அமைச்சரும், வேட்பாளரும் பிரசாரம் செய்யாமல் திரும்பி சென்றனர்.

திண்டுக்கல்



திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தில், நேற்று முன்தினம் இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்துடன், அமைச்சர் பெரியசாமி ஓட்டு கேட்டுச்சென்றார். அவர் பேச துவங்கியபோது, அங்கிருந்த பெண்கள், கிராமத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை. யாருக்கும் எந்த வேலைவாய்ப்பும் வழங்கவில்லை' என கூறி வாக்குவாதம் செய்தனர்.

பிரசார வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சரை, மக்கள் முற்றுகையிட்டு, ஆளுக்கொரு பிரச்னையைக் கூறி கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். இளைஞர்கள் சிலர், 'வேலைவாய்ப்பு பெற்று தரவில்லை. குடிநீர் வசதிகூட செய்து தரவில்லை. ஊருக்குள் வரக் கூடாது' என்றனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், எதிர்ப்பு தெரிவித்தோரை மிரட்டி விட்டு புறப்பட்டார்.

மயிலாடுதுறை



மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா வடகரை அறங்கக்குடி புதுத்தெருவில் 150 குடும்பங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்காததால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர்கள் யாரும் தங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்ட வர வேண்டாம் எனவும் அறிவித்துள்ளனர். மீறி வருவோருக்கு கடும் எதிர்ப்பைக் காட்டவும் தயாராக உள்ளனர்.

பெரம்பலுார்



பெரம்பலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அருண் நேரு, கிராமப் பகுதிகளில் பிரசாரத்திற்கு சென்றார். அப்போது, மேட்டுப்பாளையம் கிராமப் பெண்கள், தங்கள் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லை; தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என புகார் கூறினர்.

அப்போது, பெரம்பலுார் நகராட்சி தலைவர் அம்பிகாவின் கணவர் ராஜேந்திரன், 'நான் என்ன லண்டன்லயா இருக்கேன். இங்கேதானே இருக்கிறேன். என்னிடம் கூறுங்கள்' எனக் கூறி எகிற, பதிலுக்கு புகார் கூறியோரும் வம்பு செய்தனர்.

சிவகங்கை



காரைக்குடி அருகே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து, சிதம்பரம் பிரசாரம் செய்தபோது, பெண்கள் டாஸ்மாக் கடையை மூடாதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க முடியாத சிதம்பரம், பிரசாரத்தை பாதியில் நிறுத்தி புறப்பட்டார்.

அவர் சென்றதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாங்குடியை முற்றுகையிட்ட பெண்கள், 'ஒரு வீட்டில் மூன்று போர் மதுவால் இறந்துள்ளனர். டாஸ்மாக் கடையை மூடுங்கள் எனக் கூறினால் மறுக்கிறீர்கள்' என்றனர். ஒரு பெண் எம்.எல்.ஏ., காலில் விழுந்து, டாஸ்மாக் கடையை மூடுங்கள் என, கெஞ்சினார்.

மற்றொரு பெண், 'என் மகன் மது அருந்துவதால், பெண் தர மறுக்கின்றனர். வயது 35 ஆகி விட்டது. சிதம்பரம் வீட்டில் பெண் இருந்தால் தருவாரா' என கேட்க, அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் தடுமாறினார்.

இதுபோல் தமிழகம் முழுதும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், வேட்பாளர்கள், தலைவர்கள் பிரசாரத்தில் திணறி வருகின்றனர். மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட, சூளை தட்டான்குளம் பகுதியில், கோவில் நிலம் மீட்பு தொடர்பான, ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர்.

முன் கூட்டியே இந்த பிரச்னையை அறிந்து, சம்பந்தப்பட்ட இடத்துக்கு பிரசாரம் செல்லாமல் தவிர்த்து விட்டார் தயாநிதி.

இதேபாணியில் மற்ற வேட்பாளர்களும், அமைச்சர்களும், எதிர்ப்பு உள்ள பகுதியை முன் கூட்டியே அறிந்து அங்கு செல்லாமல் தவிர்க்கது துவங்கி உள்ளனர்.


Arul Narayanan - Hyderabad, இந்தியா
03-ஏப்-2024 17:56 Report Abuse
Arul Narayanan இந்த அதிருப்தியை எல்லாம் அதிமுக தான்.... அறுவடை செய்ய போகிறது.
Sampath Kumar - chennai, இந்தியா
03-ஏப்-2024 09:33 Report Abuse
Sampath Kumar நல்ல கற்பனை பிஜேபி காரனுக்கிட்ட ஒரு பய கேள்வி கேக்கல போல அது எப்படி முப்ட்டு நல்லவனுகாலா நீக்க
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்