விஜயகாந்த் மகன் தொகுதியில் பிரசாரம்: முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்வதில், முக்கிய தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தொகுதியில், விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். விஜய பிரபாகரனை ஆதரித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்துள்ளார். மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், விஜயகாந்த் மகனை எதிர்த்து போட்டியிடும், காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பா.ஜ., வேட்பாளர் நடிகை ராதிகா ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதில், முக்கியதலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த் திடீர் மறைவு தான் இதற்கு காரணம். உடல்நலக் குறைவால், சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், 2023 டிசம்பர் 28ல் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோரும், பா.ஜ., கூட்டணி முக்கிய தலைவர்களும், விஜயகாந்திற்கு புகழாரம் சூட்டினர். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என்று நம்பிக்கை அளித்தனர்.

இந்நிலையில், விஜயகாந்த் இறந்து, 100 நாட்கள் கூட ஆகாத நிலையில், அவரது மகனை எதிர்த்து பிரசாரம் செய்வதால், வாக்காளர்களிடம் அதிருப்தி ஏற்படும் என்ற கருத்து பரவி வருகிறது. இதனால், முக்கிய தலைவர்கள் பலரும், விருதுநகர் தொகுதியில் பிரசாரத்தை தவிர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.

காங்., வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் லோக்சபா தேர்தலுக்கு தே.மு.தி.க., அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, ஐந்து இடங்களில் போட்டியிடுகிறது. அதில் ஒரு இடம் விருதுநகர். அங்கே, விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகரில்நிறுத்தப்பட்டிருக்கிறார்.

தொகுதியின் பல இடங்களுக்கும் சென்று விஜய பிரபாகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாலும், நாயுடு சமூகத்தவர் அதிகம் இருக்கும் இடங்களாகப் பார்த்துத்தான் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கிருக்கும் நாயுடு சமூகத்தவர் சங்க நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

ஏற்கனவே விஜயகாந்த் மீதான அபிமானத்தில் இருக்கும் அச்சமூகத்தவர், விஜய பிரபாகரனை விஜயகாந்தாகவே பார்க்கின்றனர்.

கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து விருதுநகர் தொகுதியில் யாரேனும் போட்டியிடுவர் என அச்சமூகத்தவர் எதிர்பார்த்தனர். ஆனால், நடக்கவில்லை.

இந்நிலையில், விஜயகாந்த் மகன் போட்டியிடுவதால், அவருக்கு சாதகமாக இருக்க முடிவெடுத்துள்ளனர்.

இதனால், விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடும் ராதிகா, மாணிக் தாகூர் ஆகியோர், நாயுடு சமூகத்தவர் மத்தியில் பெரிய அளவில் பிரசாரம் செய்யாமல் உள்ளனர். அதோடு, அவ்விருவருக்கும் ஆதரவாக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்துகாக, விருதுநகர் வருவதை தவிர்க்கின்றனர்.

விருதுநகர் தொகுதிக்கு வந்து, விஜய பிரபாகரனுக்கு எதிராக பிரசாரம் செய்தால், அது விஜயகாந்துக்கு எதிரான பிரசாரமாகவே நாயுடு சமூகத்தவரால் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என முடிவெடுத்து பிரசாரத்தை தவிர்க்கின்றனர்.

இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்