கரூரில் வலுவாகும் பா.ஜ., வேட்பாளர் கலக்கத்தில் திராவிட கட்சிகள்
கரூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ.,வில் செந்தில்நாதன், காங்.,கில் ஜோதிமணி, அ.தி.மு.க., வில் தங்கவேல் போட்டியிடுகின்றனர்.
எப்போதும், கரூர் தொகுதி அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கான களமாக மட்டும் இருக்கும். இந்த முறை, கரூரில் வி.ஐ.பி., வேட்பாளர் இல்லாத நிலையில், பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதனின் தீவிர பிரசாரத்தால் களநிலவரம் மாறி வருகிறது.
கடந்த, 1996 தேர்தலுக்கு பின், கரூரில் பா.ஜ., போட்டியிடவில்லை. 2014ல் பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., வில் கிருஷ்ணன் போட்டியிட்ட போது, 7.14 சதவீதம் வாக்குகள் பெற்றார். 2016ல் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிட்ட போது, 2.14 சதவீதம் ஓட்டுகளை பெற்றது.
கடந்த காலங்களில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் போட்டி யிட்ட போது, அவர்களை தேர்தல் களத்தில் காண முடியாது. கடந்த, 28 ஆண்டுகளுக்கு பின், கரூரில் பா.ஜ., நேரடியாக களம் இறங்கியுள்ளது.
வேட்பாளர் செந்தில்நாதன், அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்; 2011, 2019 அரவக்குறிச்சி சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டவர். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டம் என்பதும், 'என் மண் - என் மக்கள்' யாத்திரை பா.ஜ.,வின் செல்வாக்கை உயர்த்தியுள்ளதாகவும் அக்கட்சியினர் நம்புகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
திராவிட கட்சியிலிருந்து பா.ஜ.,வுக்கு வந்துள்ள செந்தில்நாதன், ஒவ்வொரு தொகுதியிலும், வார்டு, கிராம பஞ்சாயத்து வாரியாக தினமும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, மத்திய அரசு சாதனைகளை விளக்கி ஓட்டு கேட்டு வருகிறார்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள், கரூர் பிரசாரத்துக்கு வந்துள்ளனர். அதேநேரம் பா.ஜ., கூட்டணியில் உள்ள, அ.ம.மு.க., - பா.ம.க.,வுக்கு குறிப்பிட்ட ஓட்டு சதவீதம் இருப்பது, செந்தில்நாதனுக்கு கூடுதல் பலம்.
'எங்களுக்கு பா.ஜ., போட்டியில்லை' என, அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகள் கூறினாலும் கூட, பா.ஜ., வேட்பாளர் எந்த கட்சி ஓட்டுகளை பிரிக்க போகிறார் என்ற கலக்கத்தில் இரு கட்சி நிர்வாகிகளும் உள்ளனர். அதேநேரம் காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிராக தி.மு.க.,வினரே உள்ளடி வேலையில் ஈடுபட்டுள்ளதால், கரூர் தொகுதியில் பா.ஜ., - அ.தி.மு.க.,வுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து