திணறும் சசிகாந்த் செந்தில்: மச்சானால் வந்த நெருக்கடி
சொந்த மச்சானால், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் -- தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர், சவுக்கு மீடியா என்ற யு டியூப் சேனல் நடத்தும் சங்கர் என்பவரின் சகோதரி கணவர். இந்த சங்கர், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தி.மு.க.,வின் முக்கிய தலைவரின் குடும்பத்தினரையும், 'அட்டாக்' செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
இது அரசுக்கும், அமைச்சர்களுக்கும், தி.மு.க., நிர்வாகிகளுக்கும் அரசியல் ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் விபரம் தெரிந்தோ, தெரியாமலோ காங்., தலைமை, சசிகாந்த் செந்திலை திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளராக்கியுள்ளது.
தி.மு.க., நிர்வாகிகளுடன், தேர்தல் பணிகளில் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு ஆதரவாக, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் பிரசாரம் செய்துள்ளார். இந்நிலையில், வேட்பாளரை தன் வீட்டிற்கு, தி.மு.க., சென்னை வடகிழக்கு மாவட்டச்செயலர் சுதர்சனம் வரவழைத்துஉள்ளார்.
அங்கு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல், சசிகாந்தின் குடும்ப விபரங்களை பற்றி கேட்டுள்ளார்.
தன் மச்சான், மனைவி செய்யும் பணிகள், தன் தந்தையின் நீதித் துறை பணிகள் குறித்தும் சசிகாந்த் விளக்கியுள்ளார்.
தன் மச்சான் செயல்பாடுகளுக்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என தி.மு.க., தரப்பினரிடம் தெரிவித்திருக்கும் சசிகாந்த் செந்தில், மச்சானோடு எதற்காகவும் தன்னை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன; கட்சி தலைமைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையில், காங்., வேட்பாளரின் பின்னணி குறித்து பிரசாரம் செய்து, தி.மு.க.,வினரை சூடேற்ற எதிர் தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து