ஓட்டு போடாவிட்டால் கடையை காலி செய்: வடமாநிலத்தவருக்கு தி.மு.க., திடீர் நெருக்கடி
சென்னை, பாரிமுனை சுற்றுப்பகுதிகளான சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, ஏழுகிணறு, பிராட்வே, தங்கசாலை, மண்ணடி, என்.எஸ்.சி., போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10க்கும் மேற்பட்ட பழமையான பெரிய கோவில்கள் உள்ளன. இவை மட்டுமின்றி, முறையான பராமரிப்பில்லாத, 100க்கும் மேற்பட்ட, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களும் உள்ளன.
அறநிலையத் துறைக்கு வருவாய் ஈட்டுவதற்காக, இந்த கோவில்களையும், தேர்களையும் சுற்றி கடைகள் கட்டப்பட்டு உள்ளன. கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களிலும், கடைகள் கட்டப்பட்டு உள்ளன. பலரது சொந்த பயன்பாட்டிற்காகவும் கோவில் நிலங்கள் ஒப்படைக்கப்பட்டு, அங்கு கடைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த கடைகளில், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை சாமான்கள், மளிகை பொருட்கள், பிளாஸ்டிக், துணிகள், ஆபரணங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மொத்த வியாபாரம் நடந்து வருகிறது. இந்த கடைகளுக்கும், நிலங்களுக்கும், முறையான கட்டணத்தை, பல வியாபாரிகள் செலுத்துவது கிடையாது. இடிந்து விழும் நிலையில் உள்ள கடைகளிலும், வியாபாரம் நடந்து வருகிறது.
வடமாநிலத்தவர்கள் மட்டுமின்றி, அப்பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்ட வியாபாரிகள் உள்ளிட்டோர், இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி, சாலையோரங்களில் வசிப்பவர்களும் கோவில்களைச் சுற்றி, பூ, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். வீடுகளும் கட்டப்பட்டு, பலர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள வடமாநிலத்தவர்கள், தெலுங்கு பேசும் வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பது வழக்கம். கடந்த சட்டசபை தேர்தலில், இப்பகுதிகளில் ஓட்டு எண்ணிக்கையில் அது உறுதியானது. இம்முறை தி.மு.க.,விற்கு அவர்களை ஓட்டளிக்க வைப்பதற்கு, மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பலரது கடைகளை காலி செய்யும்படியும், லட்சக்கணக்கான ரூபாய் வாடகை கட்டணம் செலுத்தும் படியும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, இந்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளன. இதனால், மொத்த மற்றும் சிறு வியாபாரிகள், குடியிருப்போர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து, வியாபாரி ஒருவர் கூறியதாவது:
நாங்கள் பல தலைமுறைகளாக கோவில் நிலங்களில் வர்த்தகம் செய்து வருகிறோம்; வசித்தும் வருகிறோம். பல்வேறு காரணங்களைக் கூறி கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபோதாதென்று, மண்டலக் குழு நிர்வாகிகள் வாயிலாக, தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கும்படி வெளிப்படையாகவே நெருக்கடி தரப்படுகிறது.
தொகுதியில் தி.மு.க.,விற்கு ஓட்டு சதவீதம் குறையும்பட்சத்தில், கடைகள் காலி செய்வது உறுதி என்றும் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே, சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்ததால், பாரிமுனை சுற்றுப் பகுதிகளில் உள்ள மூன்று பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. மாற்று கட்சியினர் பங்க்கை நடத்தியதால், மாநகராட்சி இடம் என்று கூறி விட்டனர்.
இதனால், சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள், எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட துாரம் அலைய வேண்டியுள்ளது. அதேபோல, கடைகளை காலி செய்து விடுவோம் என்று நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால், வேறு வழியின்றி தி.மு.க.,விற்குத் தான் ஓட்டளிக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து