பா.ஜ.,வுக்கு நன்றி சொல்ல மறுத்த பழனிசாமி :விஜய்க்கு தருகிறார் திடீர் முக்கியத்துவம்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று முன்தினம், 70வது பிறந்த நாளை கொண்டாடினார். கவர்னர் ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பா.ஜ., மகளிர் அணி செயலர் வானதி, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் உள்ளிட்டோர், பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதற்கு நன்றி தெரிவித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நடிகர் விஜய் ஆகியோரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட சிலரின் பெயர்களை திட்டமிட்டே தவிர்த்துள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், சீமானுக்கு ஆதரவு என்பதை சூசகமாக சொல்லும் வகையில், தன் படத்தின் பாடல் காட்சியில், 'மைக்' சின்னத்தை விஜய் விளம்பரப்படுத்தினார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டால்,
அ.தி.மு.க., வெற்றியை, அது கடுமையாக பாதிக்கும் என, பழனிசாமி கருதுகிறார். அதை முறியடிக்க, விஜய்யை அரவணைக்கும் முடிவுக்கு
பழனிசாமி வந்துள்ளார்.
கடந்த, 2011ல் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா முதல்வரானது போல, 2026ல் விஜயுடன் கூட்டணி சேர்ந்து,
முதல்வராக பழனிசாமி திட்டமிடுகிறார். நேற்று முன்தினம் நடந்த பழனிசாமி பிறந்த நாள் விழாவில், நடிகர் விஜய்யை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு வெகுவாக பாராட்டி பேசியதும், அதன் காரணமாக தான்.
செல்லுார் ராஜு பேசுகையில், 'விஜய் அரசியல் கட்சி துவங்கியது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு, மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார். பழனிசாமியை வாழ்த்துவது விஜய்க்கும் பெருமை; எங்களுக்கும் பெருமை' என்றார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, வரும் டிசம்பரில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு, விஜய் ஆதரவை பெற
திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விஜய் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பழனிசாமி முதல்வராக இருந்த போது, விஜய் நடித்த படத்திற்கு ஏற்பட்ட தடைகளை போக்கி, தியேட்டர்கள் கிடைப்பதற்கு உதவி செய்தார். அந்த நன்றியை விஜய் மறக்கவில்லை. அதனால் தான், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
விஜய்க்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், செல்லுார் ராஜு போன்றவர்கள்,
அவ்வப்போது குரல் கொடுக்கின்றனர். சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக விஜயை ஏற்று, அவரது தலைமையில் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தால் வெற்றி நிச்சயம்.
துணை முதல்வர் பதவி தருவதாக கூறி கூட்டணிக்கு அழைத்தால், விஜய் ஏற்பாரா என்று தெரியவில்லை. அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளுடன் கூட்டணி குறித்து, விரைவில் விஜய் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
வாசகர் கருத்து