கடலுாரில் முதல்வர் நடைபயணம் திடீர் ரத்து பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் ஏமாற்றம்
கடலுாரில் முதல்வர் ஸ்டாலின் நடைபயண நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் விழுப்புரத்தில் பிரசார பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, இரவு கடலுார் வந்தார். அங்கு, தனியார் கெஸ்ட் ஹவுசில் தங்கினார். நேற்று காலை 7:00 மணிக்கு மஞ்சக்குப்பம் பகுதியில் முதல்வர் நடை பயணமாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திடீர் ரத்து
இந்நிலையில் திடீரென முதல்வரின் நடைபயணம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதால் மருத்துவக் குழுவினர் வரவழைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதனால், நடைபயணம் நிகழ்ச்சி ரத்தானதாக கூறப்படுகிறது.
முதல்வர் நடைபயணம் மேற்கொள்ளும்போது, அவரை பார்ப்பதற்காக பீச் ரோட்டில் பொதுமக்கள், கட்சியினர் ஆவலுடன் பல மணிநேரம் காத்திருந்தனர். ஆனால், நடைபயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
முதல்வருக்காக, பூரி, இட்லி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, குருமா உள்ளிட்ட 13 வகை உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. மதியம் கதம்ப சாம்பார், மிளகு வத்தல் குழம்பு, தயிர் சாதம், பாயசம், மிளகு ரசம், உள்ளிட்ட 14 வகையான சைவ உணவுகள் தயார் செய்து பரிமாறப்பட்டன.
வாசகர் கருத்து