Advertisement

ஆ.ராஜாவுக்கு ஆதரவாக கலெக்டர்: கமிஷனிடம் அதிகாரி புகார்

'லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம், 95 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பாளரின் தேர்தல் செலவின கணக்குகளை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி லோக்சபாவில் தேர்தல் செலவின பார்வையாளராக, ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு கிரண் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக சந்தீப் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் பிரிவில் உதவி தேர்தல் செலவின பார்வையாளராக சரவணன் உள்ளார்.

இந்நிலையில், நீலகிரி லோக்சபா தொகுதி மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா, செலவின பதிவேடுகளை வாங்கி பார்வையிடுவதும், ஆவணத்தின் பிரதிகளை ஜெராக்ஸ் எடுத்து தர சொல்லி அங்குள்ள ஊழியர்களை டார்ச்சர் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, உதவி தேர்தல் செலவின பார்வையாளர் சரவணன், மாநில தேர்தல் கமிஷனுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார் அனுப்பி உள்ளார்.

உதவி தேர்தல் செலவின பார்வையாளர் சரவணன் கூறுகையில், ''நீலகிரி லோக்சபாவுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியாக உள்ள அருணா, வேட்பாளர்களின் செலவின பதிவேடுகளை அடிக்கடி பார்வையிடுவதும், கேம்ப் ஆபீசுக்கு எடுத்து வர சொல்வதும், ஜெராக்ஸ் பிரதிகளை எடுத்து தர சொல்லி 'டார்ச்சர்' செய்கிறார்.

''குறிப்பாக, தி.மு.க., வேட்பாளர் ராஜாவின் தேர்தல் செலவினங்கள் குறித்து ஜெராக்ஸ் எடுத்து தர சொல்லி நிர்ப்பந்திக்கிறார். எதுவாக இருந்தாலும் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு தகவல்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியின் இந்த செயல் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன்,'' என்றார்.

இது குறித்து கலெக்டர்அலுவலகத்தில் விசாரித்த போது, ''ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்யும் செலவு கணக்கும், தேர்தல் செலவின பார்வையாளர் கொடுக்கும் வேட்பாளரின் செலவு கணக்கு பட்டியலும் ஒத்துப் போக வேண்டும். பார்வையாளர் கொடுக்கும் கணக்கு கூடுதலாக இருக்கும்பட்சத்தில் வேட்பாளருக்கு சிக்கல் ஏற்படும்.

அதனால், தேர்தல் செலவு கணக்கை ஒப்பிடுவதற்கு முன், செலவின பார்வையாளர் கொடுக்கும் கணக்குப் பட்டியல் முன் கூட்டியே கிடைத்தால், அதற்கேற்ப வேட்பாளர் கணக்குப் பட்டியல் தாக்கல் செய்துவிடுவார்.

அந்த வகையில், ராஜாவுக்கு உதவிடுவதற்காகவே தேர்தல் அலுவலர் அருணா செயல்பட்டுள்ளார். அதற்கு உடன்படாததால், உதவி தேர்தல் செலவின பார்வையாளர் சரவணனுக்கு அருணா டார்ச்சர் கொடுத்துள்ளார்,'' என்றனர்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''அறிக்கை பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தேர்தல் அலுவலர் விளக்கம்

மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா கூறியதாவது:தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தல் படி தான் அங்கு சென்று பார்வையிட்டேன். வேட்பாளர்களின் செலவினங்களை பார்வையிட்டபோது, முதலில் பா.ஜ., வேட்பாளரின் செலவினங்களை கேட்டபோது, சரி வர இல்லை என்றனர். தொடர்ந்து, அ.தி.மு.க., வேட்பாளரின் செலவினங்களும் இல்லை என்றனர்.அப்போது, 'எந்த வேட்பாளரின் செலவினங்கள் உள்ளன' என்று கேட்டபோது தான், 'தி.மு.க., வேட்பாளர் செலவின பட்டியல் தயாராக உள்ளது' என, தெரிவித்தனர். அதையடுத்து அதை ஆய்வு செய்தேன். இதில், உள்நோக்கம் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்