ஆலடி அருணா கொலை ஜாதி பிரச்னை துாண்டும் அனிதா
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவை கொலை செய்தவர்கள், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் என்றும், அந்த ஜாதியினர் மற்றொரு ஜாதியை சேர்ந்தவர்கள் மீது பழி சுமத்தி விட்டதாகவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் சர்ச்சையாக பேசி வரும் அமைச்சர்களில், முதலிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிடித்துள்ளார். துாத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்தபோது, சீனக் கொடியுடன் வரவேற்பு விளம்பரம் வெளியிட்டார்; பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்நிலையில் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். திருநெல்வேலி காங்., வேட்பாளர் ராபர்ட் புரூசுக்கு, தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் சரிவர வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, திருநெல்வேலி லோக்சபா தொகுதிக்கு அனிதா கூடுதல் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார்.
ராதாபுரம், திசையன்விளை உட்பட திருநெல்வேலி தொகுதி முழுதும் தேர்தல் வியூக பணிகளை அனிதா வகுத்துள்ளார். இதனால், மாவட்ட நிர்வாகிகள் ஒரு கோஷ்டியாகவும், அமைச்சர் தரப்பினர் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
ராபர்ட் புரூசுக்கு ஆதரவாக, அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டு சேகரிக்க செல்லும்போது, அவருடன் சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.
நாடார் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஆதரவு திரட்டும் பணியில், அனிதா தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடார்சமுதாயத்தை சேர்ந்த மறைந்த கராத்தே செல்வினின் மனைவி ஊரில் ஆதரவு திரட்டினர்.
அப்போது அனிதா பேசுகையில், 'செல்வினை இழந்து விட்டோம். இனிமேல் இந்த நிலை மாற வேண்டும்' என, கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் உச்சமாக, பரப்பாடியில், அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலையை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் எந்த பாவ செயல்களிலும் ஈடுபடவில்லை. யாருக்கும் துரோகம் செய்யவில்லை. எந்த ஜாதியினருக்கு எதிராகவும் அவர் செயல்படவில்லை. ஆனால், அவரை வெட்டிக் கொன்று விட்டு, அந்த வழக்கை மற்றொரு ஜாதியினர் மேல் போட்டு விட்டனர்' என பேசியுள்ளார்.
அவரது பிரசாரம் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு ஆதரவாகவும், மற்றொரு சமுதாயத்தினருக்கு எதிராகவும் சென்று விட்டதால், இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் ஆபத்து காத்திருப்பதாக அவரது கட்சியினரே நொந்து போய் பேசுகின்றனர்.
வாசகர் கருத்து