ஓட்டு எண்ணிக்கையில் ஏஜன்ட்களால் பிரச்னை ஏற்பட்டால் வேட்பாளர்களே பொறுப்பு ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
தேனி: ஓட்டு எண்ணிக்கையின் போது ஏஜன்ட்களால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் வேட்பாளர்களே முழு பொறுப்பு என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. இதற்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் கல்லுாரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் வேட்பாளர்கள், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஏஜன்ட்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதாவது: ஓட்டு எண்ணிக்கையின் போது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மின்னணு சாதனங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. வேட்பாளர் அல்லது பவர் ஏஜன்ட் இருவரில் ஒருவர் மட்டுமே ஓட்டு எண்ணிக்கை கூடத்திற்கு செல்ல முடியும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையும் கரும்பலகையில் வெளியிடப்பட்டு, அடுத்து சுற்று எண்ணிக்கை துவங்கும். ஒவ்வொரு சுற்று முடிவுற்றதும், ஒரு தொகுதிக்கு 5 வி.வி.,பேட் குலுக்கல் முறையில் தேர்வு செய்து சீட்டுகள் எண்ணப்படும். வெற்றி பெறும் வேட்பாளர் 15 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வேட்பாளர், அல்லது அங்கீகரிக்கப்பட்ட பவர் ஏஜன்டிடம் வழங்கப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏஜன்ட்களால் சட்ட ஒழுங்கு பிரச்ணை ஏற்பட்டால் வேட்பாளர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷீலா, ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், சுகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து