ஜாதி ஒழிப்பு என்பது வெற்றுப்பேச்சு!

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் நான் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். ஜனாதிபதி அப்துல் கலாம், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், வி.பி.சிங், நரேந்திர மோடி உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களையும், பல்துறை பிரபலங் களையும் சந்தித்து பேட்டி கண்ட அனுபவம் எனக்கு உண்டு.

அரசியல்வாதிகள் ஜாதி ஒழிப்பு பற்றிப் பேசும்போதெல்லாம் எனக்கு செமத்தியான சிரிப்புதான் வருகிறது. தெருப் பெயர்களில் ஜாதியை ஒழித்துவிட்டதால், இந்த சமூகத்தில் இருந்தே ஜாதிகளை விரட்டி அடித்து விட்டதாக சொல்லிவிட முடியுமா?
மய்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு பக்கமாக சார்ந்திருக்கும் கமலஹாசன் பாணியில் சொல்லவேண்டுமானால் 'ஜாதி, மதமெல்லாம் இல்லாமல் இருந்தால் நல்லாத்தான் இருக்கும்.' ஆனால், ஜாதி அமைப்புகள் நிறைந்த சமூகமும், ஜாதிக் கட்சிகள் நிறைந்த அரசியலும் இருக்கும் வரை ஜாதி ஒழிப்பு என்பது வெற்றுக் கூச்சல்தான்!

அரசியல் கட்சிகள் 'தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும்?' என்று பொருளாதார ரீதியாக எடை போடுவதற்கு முன்பாக, “உன் தொகுதி யில் உன் ஜாதி ஓட்டு எவ்வளவு?” என்று கேட்டு, தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்யும் நிலைமை நீடிக்கும்வரை ஜாதி ஒழிப்பு என்பது வெற்றுக் கூச்சல்தான்! இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லுவ்தைவிட 'ஜாதிநாயக நாடு' என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பச்சிளம் குழந்தை



ஜாதி என்பது நம் நாட்டு அரசியலில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திய இரு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

ஹைதராபாத் சென்றிருந்தபோது, அங்கே ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்குப் பெண் குழந்தை பிறந்துவிட்டது. ஆனால், அதே மருத்துவமனையில் வேறு ஒரு பெண்மணி ஆண் குழந்தையை பிரசவித்திருந்தார். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்மணியின் குடும்பத்தினர் மருத்துவமனையின் ஒரு நர்ஸ் வாயிலாக குழந்தைகளை மாற்றிவிட்டனர்.

ஆனால், தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு பதிலாக பெண் குழந்தையை ஆஸ்பத்திரியில் மாற்றிவிட்டனர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் அதிகம் படிக்காத அந்த ஏழைப் பெண்மணி. அவர் போலீசில் புகார் கொடுத்ததுடன் நிற்காமல் மீடியாவிலும் சொல்லிவிட்டார். போலீஸ் விசாரித்து, குழந்தைகள் மாற்றப்பட்ட விஷயத்தைக் கண்டுபிடித்து, குழந்தைகளை அதனதன் ஒரிஜினல் அம்மாக்களிடம் ஒப்படைத்து விட்டனர்.

தான் பெற்ற ஆண் குழந்தையைப் போராடிப் பெற்ற அந்த ஏழைத் தாயை ஹைதராபாதை ஒட்டிய ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்துக்குச் சென்று நேரில் சந்தித்து பேட்டி கண்டேன். அவர் ஆதியோடு அந்தமாக முழுக் கதையையும் கூறினார்.

அம்மாவையும் அந்த ஒருவாரக் குழந்தையையும் சேர்த்து படமெடுத்துக் கொண்டு புறப்பட்டபோது அந்தப் பெண்மணியிடம் “குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் சொன்னார் “கெங்கு ரெட்டி” ஆம்! அந்த ஏழைப் பெண்மணி வீட்டு பச்சிளம் குழந்தைக்குப் பெயர் “கெங்கு ரெட்டி”

அடுத்த சம்பவம் சென்னையில் நடந்த ஒன்று. கடந்த, 2014 பொதுத் தேர்தலின்போது ஆலந்துார் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஞாநி போட்டியிட்டார்.

படித்த மேதாவி



சென்னை மயிலாப்பூரில் ஞாநி உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு பேச்சாளராக அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும், பிரபல தேர்தல் கணிப்பு வல்லுனருமான யோகேந்திர யாதவ் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் ஞாநி பேசும்போது, “இது சமூகப் புரட்சிக்கு வித்திட்ட பெரியாரின் மண்! நீங்கள் மெத்தப் படித்த அறிவுஜீவி. ஆனால், உங்கள் பெயருடன் 'யாதவ்' என்ற ஜாதிப்பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனவே, இந்த மேடையில் உங்கள் பெயரில் இருந்து ஜாதியை விட்டொழிப்பதாக அறிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

யோகேந்திர யாதவுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, தன் பேச்சின் இந்தப் பகுதியை தமிழில் பேசிய பின் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறினார் ஞாநி.

இதனைக் கேட்டுக் கொண்ட யோகேந்திர யாதவ், பின்னர் பேசும்போது, “நான் என் பெயரில் இடம்பெற்றிருக்கும் யாதவ் என்ற ஜாதிப்பெயரை, நீக்கிவிட வேண்டும் என்று நண்பர் ஞாநி கூறினார். ஆனால், அதை என்னால் செய்ய இயலாது. யோகேந்திர யாதவ் என்பது என் அப்பா எனக்கு வைத்த பெயர். என் அப்பா வைத்த பெயரை மாற்ற எனக்கு உரிமை இல்லை. யோகேந்திர யாதவ் என்பதுதான் என் பெயராக கடைசிவரை இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இந்த இரண்டு சம்பவங்கள் இந்திய சமூகத்துக்குச் சொல்லும் செய்தி என்ன? கல்வி அறிவு குறைந்த ஏழை கிராமத்து மக்கள் மத்தியிலும் ஜாதிப் பிடிப்பு இருக்கிறது. மெத்தப் படித்த மேதாவிகளையும் ஜாதி கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

அப்படியெனில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரு வெற்று கோஷம்தானே?

-எஸ்.சந்திமெளலி,பத்திரிகையாளர்


spr - chennai, இந்தியா
16-ஏப்-2024 17:46 Report Abuse
spr ஜாதி ஒழிப்பு அவசியமில்லை அது பிறப்பின் போது அடையாளப்படுத்தப்பட்டது. அறவே இயலாத ஒன்று ஆனால் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாவிடில், ஜாதி வெறி உருவாகாது மக்கள் இயல்பாக ஒருவரோடு ஒருவர் பழகுவார்கள். எப்படி மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களையும் அரவணைத்துப் போவது என்று சொல்கிறோமோ அது போலவே ஜாதிச்ச்சார்பின்மையை அரசியல்வியாதிகள் கடைபிடித்தால் பிரச்சினையே இல்லை பேச வேண்டிய தேவையுமில்லை
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்