கைகொடுக்குமா ஜாதி ஓட்டு கணக்கு: கடைசி நேர போராட்டத்தில் அமைச்சர் நேரு

பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் கணிசமான அளவில் இருக்கும் முத்தரையர் ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கும், உடையார் ஓட்டுகள் பா.ஜ.,வுக்கும் செல்லும் சூழல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க., முதன்மை செயலரும், அமைச்சருமான நேரு மகன் அருண், பெரம்பலுார் தொகுதியில் போட்டியிடுகிறார். தனி தொகுதியாக இருந்த பெரம்பலுார், 2009 தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் பொது தொகுதியானது. பெரம்பலுார், துறையூர், குளித்தலை, மண்ணச்சநல்லுார், முசிறி, லால்குடி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் இங்குள்ளன.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் நடந்த மூன்று தேர்தல்களில், இரண்டு முறை தி.மு.க., வென்றுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், இங்குள்ள ஆறு சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெற்றது. இதனால், தன் மகன் அருணை நம்பிக்கையுடன் நேரு களமிறக்கிஉள்ளார்.

உற்சாகம்



கடந்த 2019ல் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், நிறைய ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். ஆனால், அவர் இந்த முறை பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் கணிசமாக உள்ள உடையார் சமூகத்தைச்சேர்ந்தவர்.

அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரமோகன், தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழகம் முழுதும் சிறுபான்மையினர் தான் தி.மு.க.,வின் ஓட்டு வங்கி. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுகள் குறைவாக இருக்கும் தொகுதிகளில் பெரம்பலுாரும் ஒன்று.

முத்தரையர் சமூகத்தினர் எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்தே அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வந்துள்ளனர்.

இந்த முறை பிரதான போட்டியாளர்களில், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரமோகன் மட்டுமே முத்தரையர் என்பதால், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொகுதிக்குள் கணிசமாக உள்ள உடையார் சமூகத்தினரின் ஓட்டுகளை குறிவைத்து, பாரிவேந்தர் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2014, 2019 தேர்தல்களில், உடையார் சமூக ஓட்டுகள் அதிகமாக அவருக்கு கிடைத்தன.

சீண்டிய விவகாரம்



பெரம்பலுார் தொகுதிக்குள் ரெட்டியார், வேளாளர் ஓட்டுகள் கணிசமான அளவில் உள்ளன. இவர்கள் தி.மு.க.,வுக்கே அதிக அளவில் ஓட்டளித்து வந்துள்ளனர்.

ஆனால், பா.ஜ., நிர்வாகிகள் பலர் இச்சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இதனால், இச்சமூகங்களில் குறிப்பிடத்தக்க சதவீதம் பா.ஜ.,வுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து அ,தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக உள்ள அருந்ததியர் சமூகத்தினரின் ஓட்டுகள், இந்த முறையும் அக்கட்சிக்கே அதிகம் செல்லும் நிலை உள்ளது.

இயற்கையாகவே இந்த ஜாதி ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு எதிராக போகக்கூடிய சூழல் இருக்கிறது என்று கணிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு ஜாதியினரையும் நோக்கி அவ்வப்போது அமைச்சர் நேரு சீண்டிய விவகாரமும் இப்போது பெரிதாக கிளப்பப்பட்டு இருக்கிறது.

இந்த ஜாதி கணக்குகள் ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும், கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி உற்சாகத்தோடு வலம் வருகிறது.

இதற்கிடையில், பிற சமுதாயங்களான ரெட்டியார், வேளாளர் ஓட்டுகளை அதிக அளவில் பெற, கிராமம் கிராமமாகச் சென்று, அச்சமூகங்களின் முக்கிய பிரமுகர்களை நேருவும், அவரது குடும்பத்தினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது,அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளை சரிகட்டும் முயற்சியிலும், தி.மு.க., தரப்பு ஈடுபட்டிருக்கிறது.

சிக்கல்

இது குறித்து, பெரம்பலுார் அரசியல் வட்டாரங்களில் கூறியதாவது:

அமைச்சர் நேருவை பொறுத்தவரை, கட்சியினர் பலருடன் சினேகமாக இருப்பார்; அதே நேரம், பலரையும் ஜாதியைச் சொல்லி விமர்சித்து பேசுவார்.

இதனால், பல ஜாதியைச் சேர்ந்தோரும் காயம்பட்டவர்களாக உணருகின்றனர். அவர்கள் தேர்தலில் நேருவை பழி தீர்க்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு, தங்கள் ஜாதியைச் சேர்ந்தோரை, தி.மு.க.,வுக்கு எதிராக, குறிப்பாக அமைச்சர் நேருவுக்கு எதிராக திருப்பி உள்ளனர்.

அதனால், பெரம்பலுாரில் போட்டியிடும் நேரு மகன் அருணுக்கு தேர்தலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த நேரு, கடைசி நேரத்தில் பல ஜாதி பிரமுகர்களையும் சந்தித்து சரிகட்டும் வேலையில் இறங்கியுள்ளார். ஆனால், அது எடுபடுமா என தெரியவில்லை.

இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.


சிவா - Jeddah, சவுதி அரேபியா
14-ஏப்-2024 13:20 Report Abuse
சிவா தயவு செய்து ஜாதியை வைத்து ஓட்டளிக்க வேண்டாம். சென்ற தேர்தலில் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற திரு. பச்சைமுத்து அவர்கள் ஜாதி பார்த்து தனது கல்லூரியில் இலவசமாக இடமளிக்கவில்லை. ஒரு ஏழ்மை யாதவ மாணவனிடம் நான் பேசியதில் இருந்து அறிந்தது என்னவென்றால், வருடத்திற்கு 300 பேருக்கு இலவசமாக தனது கல்லூரியில் இடம் தந்தாராம். மக்களே யோசித்து வாக்களியுங்கள்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்