கம்யூ., வேட்பாளரை அலறவிட்ட நா.த.க., பெண் வேட்பாளர்
நாகையில் நான்கு முறை எம்.பி.,யாக இருந்த செல்வராஜை, நாம் தமிழர் கட்சியின் பெண்வேட்பாளர் கார்த்திகா, நேருக்கு நேராக சரமாரியாக கேள்விகள் கேட்டு வறுத்தெடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., வேட்பாளர் செல்வராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில், கார்த்திகா போட்டியிடுகிறார்.
நேற்று காலை செல்வராஜ் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது கார்த்திகா, தன் வாகனத்தில் அங்கு வந்தார். பிரசாரத்தில் அவர், ''நான்கு முறை எம்.பி.,யாக இருந்த எம்.செல்வராஜ், சி.பி.சி.எல்., நிறுவனத்தின் கங்காணியாக செயல்பட்டு, 600 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்தார். தொகுதி மேம்பாட்டு நிதியாக ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட, 25 கோடி ரூபாய் எங்கே போனது?'' என கேள்வி எழுப்பினார்.
எதிரில் இருந்த செல்வராஜ், ''ஓட்டு கேட்க வேண்டுமே தவிர விமர்சனம் செய்யக் கூடாது'' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் எழுந்ததால், மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. கம்யூ., நிர்வாகிகள், வாக்குவாதத்தில் ஈடுபட்ட தங்கள் கட்சியினரை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து கார்த்திகா, ''நாகை தொகுதி ஒரு குடும்பத்தின் சொத்தா? செல்வராஜ் எம்.பி., தன் சொந்த ஊரான செருகளத்துாருக்கு சென்று ஓட்டு கேட்க தைரியம் இருக்கிறதா. அங்கு சாலை கூட போடாதவர், பார்லிமென்டில் கர்நாடகா எம்.பி., மேகதாதுவில் அணை கட்டுவோம் என்றபோது வாயே திறக்காமல் இருந்தவர் செல்வராஜ்,'' என சரமாரியாக குற்றஞ்சாட்டி பேசினார்.
அதிகளவில் கம்யூ., கட்சியினர் கூடியிருந்த பகுதியில், ஒரு பெண் வேட்பாளர், 10க்கும் குறைவான தொண்டர்களுடன் கம்யூ., கட்சியினரை வறுத்தெடுத்த வீடியோ தொகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
வாசகர் கருத்து