Advertisement

வேட்பாளர் பெயருடன் ஜாதி பட்டம்: பா.ம.க., பிரசாரத்தின் பின்னணி என்ன?

கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக மலையரசனும், அ.தி.மு.க., வேட்பாளராக குமரகுருவும் போட்டியிடுகின்றனர். இருவரும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தங்கள் ஜாதி அடையாளத்தை எங்கும் அவர்கள் காட்டிக் கொள்வதில்லை. ஏனெனில், கள்ளக்குறிச்சி பட்டியல் சமூகத்தினர், வன்னியர்கள் அதிகம் வாழும் தொகுதி.

அதேநேரம், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக தேவதாஸ் அறிவிக்கப்பட்டார். அவரும் உடையார் இனத்தைச் சேர்ந்தவர் தான். ஆனாலும், பா.ம.க., அவருடைய பெயரை அறிவிக்கும்போது, தேவதாஸ் உடையார் என குறிப்பிட்டது.

ஆத்துார் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம், பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரம் செய்யும்போது, 'பா.ம.க., வேட்பாளராக போட்டியிடும் தேவதாஸ் உடையாருக்கு ஆதரவு கொடுங்கள்; இவரை, பொது வேட்பாளராக நினைத்து ஓட்டு போடுங்கள்' என, பிரசாரம் செய்தார்.

பா.ம.க.,வை வன்னியர் சார்ந்த கட்சி என்று குறிப்பிட்டு வரும் நிலையில், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு, கள்ளக்குறிச்சி தொகுதியில் 'சீட்' வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில், அக்கட்சி தலைவர் அன்புமணி, வேட்பாளர் பெயருடன், அவரது ஜாதியை குறிப்பிட்டு பிரசாரம் செய்து வருகிறார்.

பா.ஜ., கூட்டணியில், ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பாரிவேந்தர் இடம் பெற்றுள்ளார். ஐ.ஜே.கே.,வில் பெரும்பாலும் உடையார் சமுதாயத்தினர் உள்ளனர். ஐ.ஜே.கே., சார்ந்த ஓட்டுகளையும், உடையார் மற்ற சமூகத்தினரின் ஓட்டுகளையும் பெறுவதற்காக, இப்படி ஒரு பிரசார யுக்தியை அன்புமணி மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக நீதி குறித்து பேசி வரும் பா.ம.க.,வில், வேட்பாளரின் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளத்தை, அன்புமணி குறிப்பிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்