வி.சி., கட்சியில் கோஷ்டி பிரச்னை உச்சம்: ஓட்டு வங்கியில் ஓட்டை விழுமோ என தி.மு.க.,வினர் அச்சம்

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக மலையரசன் போட்டியிடுகிறார். இவரை, ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பெத்தநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் செய்தார்.

இக்கூட்டத்திற்கு முன், 'பூத்' கமிட்டி அமைத்தல், தி.மு.க.,வினருடன் தேர்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்க, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

கள்ளக்குறிச்சி கலாட்டா



அப்போது, வி.சி., கட்சி, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பையா மற்றும் ஆத்துாரை சேர்ந்த, கவுன்சிலர் நாராயணன் என, இரு 'கோஷ்டி'களாக கட்சியினருடன் வந்து, தனித் தனியாக மாவட்ட செயலரை சந்தித்து பேசினர்.

அவர்களிடம், 'தேர்தல் பணிகள் உள்ளிட்டவற்றை யார் மேற்கொள்வது என்று, நீங்களே முடிவு செய்து வாருங்கள்' என, தி.மு.க., மாவட்ட செயலர் கூறி அனுப்பினார். வெளியே சென்ற வி.சி., நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருதரப்பு நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசிய மாவட்ட செயலர், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

கிருஷ்ணகிரி கிளர்ச்சி



கள்ளக்குறிச்சி தொகுதி பிரச்சனையை சரி செய்ய தி.மு.க.,வினர் பஞ்சாயத்து பேசி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வி.சி., கட்சி மாவட்ட செயலர்களின் போக்கால், கட்சி நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர். கிருஷ்ணகிரி, வி.சி., மத்திய மாவட்ட செயலராக இருப்பவர் மாதேஷ். இவருக்கு, கடந்த, 2023 ஜூன் மாதத்தில் பொறுப்பு வழங்கப்பட்டது.

இவர், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை எனவும், தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள போராட்டங்களை நடத்தினார் எனவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. அதேபோல கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களிலும் வெளியூர்வாசிகளுக்கே பொறுப்பு வழங்கப்பட்டதால், மாவட்டம் முழுதிலுமுள்ள அக்கட்சியினர் விரக்தியில் உள்ளனர்.

இது குறித்து வி.சி., கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

மாவட்டத்தில், வி.சி., கட்சிக்கு மட்டும், 1.50 லட்சம் ஓட்டுகள் உள்ளன. தற்போதுள்ள மாவட்ட செயலர்கள் இப்பகுதி பிரச்னை குறித்து தெரியாதவர்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலர் மாதேஷ், மூத்த நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை. இதனால் எங்கள் ஓட்டுகளில், ஒரு லட்சம் ஓட்டுகளை, சிந்தாமல், சிதறாமல் அ.தி.மு.க.,வுக்கு போட முடிவு செய்துள்ளோம். பா.ஜ., நிர்வாகிகளும் தங்களுக்கு ஆதரவு கேட்டு எங்களிடம் பேசி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியினர் பிரச்னையை தீர்ப்பதா, தேர்தல் பிரசாரம் செய்வதா என வி.சி., முக்கிய பிரமுகர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு குறைவான நாள் உள்ள நிலையில், கூட்டணியில் உள்ள வி.சி., கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்னை, தி.மு.க., ஓட்டு வங்கியில் ஓட்டை விழ வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்