நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது பா.ஜ.,: தேஜஸ்வி சூர்யா சிறப்பு பேட்டி
பெங்களூரு லோக்சபா தெற்கு தொகுதி எம்.பி., மற்றும் பா.ஜ., தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா. தேசிய அளவில்வேகமாக வளர்ந்து வரும் இளம் தலைவர். பார்லிமென்டில் அதிக கேள்விகளை கேட்டு, விவாதங்களில் பங்கேற்ற கர்நாடக எம்.பி., நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரசின் இலவசங்கள் வழங்கும் அரசியல் வரவேற்பு பெற்றுள்ளதா?
இந்த தேர்தல் ஒரு மாநிலத்துக்கானது அல்ல. தேசிய அளவில் நடக்கக்கூடியது. ஒரு நாட்டின் பிரதமரை தேர்வு செய்யக்கூடிய தேர்தல். காங்கிரஸ் இலவசங்கள் எடுபடாது. மக்கள் தேசிய அளவில் சிந்தித்து ஓட்டு போடுவர். லோக்சபா தேர்தலில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.
1. தேசிய அளவில் திடமான முடிவு எடுத்தல்
2. பிரதமரை தேர்வு செய்தல்
இவை இரண்டிற்கும் தகுதியானவர் பிரதமர் நரேந்திர மோடி.
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு ஒரு முன்னோடியா? கர்நாடகாவில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிக்க முகாந்திரம் இருக்கிறதா? இதற்கு என்ன தீர்வு?
முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, கர்நாடகாவில் பயங்கரவாத சம்பவங்கள் நடக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. மாநில தலைமை செயலகமான 'விதான் சவுதா'வில், காங்., - எம்.பி., முன்னிலையிலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புகின்றனர்.
பெங்களூரு நசரத்பேட்டையில், ஒரு மொபைல் கடை நடத்தும் இளைஞரை, ஹனுமன் சாலிஸா இசைத்ததற்காக ஒரு கும்பல் பயங்கரமாக தாக்கியது. முந்தைய ஆட்சியில் நடக்காத சம்பவங்கள் இப்போது நடக்கின்றன என்றால், அதற்கு அரசு இத்தகையோரை வளர விடுகிறது என்றுதானே அர்த்தம்? இதற்கு ஒரே தீர்வு, மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும்.
கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கர்நாடக பட்ஜெட்டில் நிறைய மதம் சார்ந்த ஒதுக்கீடு கிடைத்துள்ளதே...
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே முஸ்லிம்களுக்கு தான் முன்னுரிமை அளிப்போம் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். ஒரு சமூகத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளித்ததன் விளைவாகத் தான், அவர்களுக்கு மக்கள் பாடம் கற்பித்தனர். அனைத்து சமுதாயத்தினரும் ஓட்டு போட்டதால் தானே அவர்களால் ஆட்சி அமைக்க முடிந்தது? சமூகத்தில் அனைத்து தரப்பினரும் உள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரி பங்கீடு விஷயத்தில் கர்நாடகா வஞ்சிக்கப்படுவதாக காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டுகிறதே?
நாட்டிலேயே ஜி.எஸ்.டி., பங்கு முழுமையாக பெற்ற ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. மத்திய அரசு ஜி.எஸ்.டி.,யில் வழங்க வேண்டிய பங்கில் பாக்கி ஏதும் இல்லை. காங்கிரசார் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டுகின்றனர்.
வறட்சி நிவாரண விஷயத்தில் கர்நாடகாவை மத்திய அரசு வஞ்சித்துள்ளதா?
தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக, 15வது நிதி கமிஷன்படி, 636 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு, 18,538 கோடி ரூபாய் சிறப்பு நிதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது. சிறப்பு நிதிக்கு சில நடைமுறைகள் உள்ளன. ஏற்கனவே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
உயர்மட்ட கமிட்டி, நிதியை ஒதுக்க அனுமதி தர வேண்டும். அதற்குள் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனாலும், சிறப்பு அனுமதி தரும்படி தேர்தல் கமிஷனிடம் மத்திய அரசு கோரியுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், நிதி வழங்கப்படும்.
மத்தியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இருந்தபோது, 2004 - 05ல், 1,147.72 கோடி ரூபாய் கேட்டு, 83.67 கோடி ரூபாயும்; 2006 - 07ல், 1,262.95 கோடி ரூபாய் கேட்டு, 78.96 கோடி ரூபாயும்; 2008 - 09ல், 2,043.07 கோடி ரூபாய் கேட்டு, 83.83 கோடி ரூபாயும்; 2009 - 10ல், 394.92 கோடி ரூபாய் கேட்டு, 116.49 கோடி ரூபாயும்; 2011 -12ல், 6,215.34 கோடி ரூபாய் கேட்டு, 469.03 கோடி ரூபாயும்; 2012 - 13ல், 7,672.40 கோடி ரூபாய் கேட்டு, 526.06 கோடி ரூபாயும்; 2013 - 14ல், 778.06 கோடி ரூபாய் கேட்டு, 226.57 கோடி ரூபாயும், கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன.
அதே, தற்போதைய பா.ஜ., ஆட்சியில், 2014 - 15ல், 779.200 கோடி ரூபாய் கேட்டு, 200.85 கோடி ரூபாயும்; 2015 - 16ல், 5,247.98 கோடி ரூபாய் கேட்டு, 2,263.43 கோடி ரூபாயும்; 2016 - 17ல், 8,013.37 கோடி ரூபாய் கேட்டு, 2,577.984 கோடி ரூபாயும்; 2018 - 19ல், 4,498.30 கோடி ரூபாய் கேட்டு, 1,990.36 கோடி ரூபாயும் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது 2004 - 2014 வரையிலான 10 ஆண்டு கால மன்மோகன் சிங் ஆட்சியில், மாநில அரசு கேட்ட வறட்சி நிதியில், 8 சதவீதமும்; 2014 - 2024 வரையிலான 10 ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில், 38 சதவீத நிதியும் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2023 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட தோல்வி மீண்டும் 2024ல் லோக்சபா தேர்தலில் நடக்காது என்பதற்கு, ஓராண்டில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
100 சதவீதம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் முதல், பெரிய செல்வந்தர்கள் வரை யாரை கேட்டாலுமே சொல்வர். கர்நாடகாவில், 28க்கு, 28 தொகுதிகளிலும்; நாட்டில் 400 தொகுதிகளுக்கும் மேலாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். கர்நாடக காங்கிரஸ் அரசு, ஒரு நோக்கம் இல்லாமலும்; திட்டம் இல்லாமலும் செயல்படுகின்றனர்.
ராமர் கோவில், கர்நாடக வாக்காளர்கள் மத்தியில் ஏதேனும் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறதா?
ராமர் கோவில் மட்டும் அல்ல, தேசிய குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, இப்படி மத்திய அரசின் பல முடிவுகளால் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 500 ஆண்டுகளாக இருந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இப்படி நீண்ட ஆண்டுகளாக இருந்த பிரச்னைகள், கடந்த 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில்தான் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவிற்கு, அவருடைய ஜாதி அந்தஸ்தால் மட்டுமே பதவி கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்களே...
அவரது திறமை, தலைமைப்பண்பு போன்ற குணங்களால்தான் விஜயேந்திராவுக்கு மாநில தலைவர் பதவி கிடைத்துள்ளது. ஒரு இளைஞராக அவர் திறம்பட செயல்படுகிறார்.
பா.ஜ.,வின் தேசிய இளைஞரணி தலைவராக இருக்கிறீர்கள்; முதல்முறை வாக்காளர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? மாநிலத்திற்கு மாநிலம் இதில் ஏதேனும் சுவாரசியமான வேறுபாடு இருக்கிறதா?
நான் 2019ல், 28 வயது இளைஞனாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். சில மாதங்களுக்கு முன்பு, நாடு முழுதும் 50 லட்சம் இளைஞர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்கள் அனைவருமே, ஊழல் இல்லாத ஆட்சி, வளர்ச்சி பணிகள் செய்யும் ஆட்சி, வேலைவாய்ப்பு உருவாக்கும் நல்லாட்சிதான் விரும்புகின்றனர். இதை பிரதமர் மோடி ஏற்கனவே செய்து வருகிறார்.
காங்கிரஸில் வாரிசு தலைவரான ராகுல், இளைஞர்களுக்காக ஐந்து வாக்குறுதிகளை அறிவித்து உள்ளார். 30 லட்சம் பேரை அரசு வேலையில் சேர்ப்பது, தொழிற்பயிற்சி பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை உறுதி செய்தல் உள்ளிட்டவை கவர்ச்சிகரமாக இருக்கின்றனவே. இதெல்லாம் சாத்தியம்தானா? பா.ஜ.,வால் இதே உத்தரவாதங்களை தர முடியுமா?
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு சார்பில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை தரப்பட்டுள்ளன. இதுதவிர, தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
ஏற்கனவே பா.ஜ., அமல்படுத்தியுள்ள திட்டங்களை, காங்கிரசார் புதிதாக அறிவித்துள்ளதாக பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். 10 ஆண்டு கால தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.50 சதவீதமாக இருந்தது. பா.ஜ., ஆட்சியில், 8.60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முதன்முறை எம்.பி.,யாக கடந்த 5 ஆண்டுகளில், தொகுதி மக்களுக்கு நீங்கள் செய்தது என்ன?
கொரோனா காலத்தில், ஏழைகள் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத போது, 'சாப்ட்வேர்' உருவாக்கி, ஆன்லைன் வாயிலாக படுக்கை வசதிகள் செய்து தரப்பட்டன. ஐ.சி.யு., வார்டிலும் சென்று நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டன. 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த புறநகர் ரயில் திட்டத்துக்கு அனுமதி பெற்று, பணிகள் நடந்து வருகின்றன.
நாட்டிலேயே அதிகபட்சமாக, 132 ஜன் அவுஷதி மருந்தகங்கள், என் தொகுதியில் தான் உள்ளன. புறநகர் வட்ட சாலைக்கு அனுமதி பெறப்பட்டது. நாட்டிலேயே பார்லிமென்டில் அதிகபட்ச கேள்விகள் கேட்டதும், விவாதங்களில் பங்கெடுத்ததும் நான்தான்.
முழுமையாக எம்.பி., நிதியை பயன்படுத்தி உள்ளேன். 1.50 லட்சம் மக்களுக்கு, 'ஆயுஷ்மான் பாரத்' சுகாதார அட்டை வாயிலாக, 431 கோடி ரூபாய் மதிப்புள்ள சிகிச்சை இலவசமாக பெறுவதற்கு உதவி செய்துள்ளேன். மெட்ரோ 3, 3ஏ கட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 5,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து