கிளி ஜோதிட பிரச்னை தங்கர்பச்சான் சந்தோஷம்
கடலுார் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான், தேர்தல் பிரசாரத்தினுாடே கிளி ஜோதிடம் பார்த்தார். கிளி, அய்யனார் படத்தை எடுத்துக் கொடுக்க, தேர்தலில் தனக்கே வெற்றி என்று கொண்டாடினார்.
இந்த செய்தி பரவ, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இரு கிளி ஜோதிடர்களை கைது செய்தது வனத்துறை. வன விலங்கு உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, கிளியை கூண்டுக்குள் அடைத்து தொந்தரவு செய்ததாக இருவரையும் பிடித்தனர்.
இதற்கு அரசியல் ரீதியில் அரசை நோக்கி கடும் விமர்சனம் வைக்கப்பட்டதும், ஜோதிடர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களை கடந்து பொதுமக்கள் மத்தியிலும் பேசு பொருளானது.
ஜோதிடர்கள் பிடிபட்டதும், 'உங்களால் தானே ஜோதிடர்களுக்கு பிரச்னை' என்று தங்கர்பச்சானை போன் போட்டு நண்பர்களும்; அரசியல் பிரமுகர்கள் கலாய்த்தனர். இதனால் சற்று வருத்தம் அடைந்தார் தங்கர்பச்சான். பின்னர், ஜோதிடர்கள் விடுவிக்கப்பட்ட தகவல் அறிந்து சந்தோஷம் அடைந்தார்.
''கிளி ஜோதிடர்கள் கைது என்று அறிந்ததும் வருத்தப்பட்டேன். விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல் வரவும் மகிழ்ச்சியாகி விட்டேன். ஜோதிடர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கிளி ஜோதிடம் பார்த்த தகவல் வெளியானதால், கடலுார் மட்டுமல்ல; மற்ற ஊர்களுக்கும் நான் யார் என்று சொல்லத் தேவையில்லாமல் போய் விட்டது. அந்த அளவுக்கு, இந்த சர்ச்சைக்குரிய செய்தி என்னை பிரபலப்படுத்தி விட்டது,'' என்று சொல்கிறார் தங்கர்பச்சான்.
வாசகர் கருத்து