ஆபத்தை திசை திருப்பவே கச்சத்தீவு பிரச்னை: ஸ்டாலின் பேச்சு
"இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து பறிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் தான் பா.ம.க., கூட்டணி அமைத்துள்ளது" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்., வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடிக்கு சமூகநீதி மீது அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை மருந்துக்குக் கூட அவர் நினைப்பதில்லை. சமத்துவத்துக்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளியாக மாற்ற நினைக்கும் பிரதமர் நமக்கு தேவையில்லை. தேர்தலின் வாயிலாக இரண்டாம் விடுதலை போராட்டத்தை எழுதக் கிடைத்த வாய்ப்பு தான், இண்டியா கூட்டணி
சமூகநீதி தான் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றும் உயர்த்தி வருகிறது. நீதிக்கட்சி தான் இடஒதுக்கீட்டை வழங்கியது. அதற்கு வந்த பேராபத்தைக் கண்டு ஈ.வெ.ரா., பொங்கி எழுந்தார்.
அம்பேத்கர் அதற்கான சட்டத்தை உருவாக்கினார். இவர்களின் முயற்சியால் தான் பழங்குடியின, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்கான அங்கீகாரமும் கிடைத்தது.
கடந்த 2, 3 தலைமுறைகளாகத் தான் நம் வீட்டில் இருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் எனவும் அத்தி பூத்தது போல ஐ.ஏ.ஸ்., ஆக மாணவர்கள் வர முடிகிறது. இது பா.ஜ.,வின் கண்களை உறுத்துகிறது.
இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து பறிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடன் தான் பா.ம.க., கூட்டணி அமைத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை பா.ஜ.,வை விமர்சித்தவர்கள், இன்று அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதை அந்தக் கட்சித் தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
பா.ஜ., - பா.ம.க., கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி. இண்டியா கூட்டணி கொள்கைக் கூட்டணி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், நீட் விலக்கு, ஜி.எஸ்.டி மாற்றம் உள்பட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
தி.மு.க., சொல்வதை காங்கிரஸ் தனது வாக்குறுதியாக வழங்கப்பட்டுள்ளது, இது தான் சமூகநீதி கூட்டணி. பா.ஜ.,வின் திட்டம் மிக ஆபத்தானது. தமிழகத்தின் பண்பாட்டின் மீது தாக்குதல் நடத்துவார்கள். இங்கு ஆட்சியை நடத்துவது டில்லியா... நாக்பூரா என்ற சந்தேகம் வந்துவிடும்.
இந்த ஆபத்தை மக்கள் உணரக் கூடாது என்பதால் தான் கச்சத்தீவு குறித்துப் பேசி திசை திருப்புகிறார். 10 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ., செய்த ஊழல் ஒன்றா இரண்டா, அதற்கு எடுத்துக்காட்டு தான் தேர்தல் பத்திரம்.
மக்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என நினைத்து வாய்க்கு வந்தபடி பொய் பேசுகிறார் பழனிசாமி. பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவராம். பழனிசாமி உழைத்து முன்னேறினாரா, ஊர்ந்து முன்னேறினாரா என்பது ஊருக்கு தெரியும்.
அ.தி.மு.க.,வில் கடைத் தொண்டன் கூட தலைவராக முடியும் என பழனிசாமி சொல்கிறார். சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் என மூன்று பேரின் முதுகிலும் குத்தியவர் பேசலாமா?
தன்னை விவசாயி என்று பழனிசாமி பேசி வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்து விவசாயிகளின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டவர் தான் பழனிசாமி.
இவ்வவாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து