கொஞ்சம் அளந்து பேசினால் நல்லது: ஸ்டாலினுக்கு நிர்மலா பதிலடி
''ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்டி அடிக்க முடியாது. விரட்டி அடிப்போம் என சொல்பவர்கள் தான், பாசிச கட்சிகள். முதல்வர் இன்னும் கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசினால் நல்லது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடந்த தி.மு.க., கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ., வீட்டிற்கும் கேடு நாட்டிற்கும் கேடு. மோடி எத்தனை முறை படையெடுத்தாலும் தமிழகத்தை பா.ஜ.,வால் கைப்பற்ற முடியாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ரேஷன் என நாட்டை பா.ஜ., நாசப்படுத்தி விடும். உங்கள் வாக்கு பாசிசத்தை வீழ்த்துவதாக அமையட்டும். பா.ஜ., - பா.ம.க., போன்ற எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் கண்டு, விரட்டியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இதுகுறித்து பெங்களூரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
யார், யாரை விரட்டி அடிப்பர் என்று அவர்களுக்கே தெரியும். ஜனநாயகத்தில் யாரும், யாரையும் விரட்டி அடிக்க முடியாது. விரட்டி அடிப்போம் என சொல்பவர்கள் தான், இன்றைக்கு பாசிச கட்சிகள்.
தி.மு.க.,வின் அரசியல் சொற்பொழிவுகளில், அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை யோசித்தால், இது போன்று அதிகமாக, கோரமாக, சில பயங்கரமான வார்த்தைகளை போட்டு மக்களை ஆக்ரோஷப்படுத்துவது தெரியும்.
ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத கட்சி. அதனால் தான் விரட்டி அடிப்போம் என்ற வார்த்தையை சொல்கின்றனர். அவர்கள் மட்டும் ஓட்டுப்போடவில்லை. மக்கள் அனைவரும் ஓட்டுப் போடுகின்றனர். முதல்வர், வார்த்தையை இன்னும் கொஞ்சம் அளந்து பேசினால் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து