மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் போலீஸ்: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
"அ.தி.மு.க., நிர்வாகிகளை வேண்டுமென்றே காவல் நிலையத்துக்கு வரவழைத்து மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்" என, தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார் மனுவை அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் அ.தி.மு.க., தேர்தல் பிரிவு நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று நினைக்கும் நபர்களிடம், 'தேர்தல் முடியும் வரையில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்' என குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 110ன் கீழ் பிரமாண பத்திரத்தை எழுதி வாங்குவது வழக்கம்.
தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடப்பதை உறுதி செய்வதற்காக இந்த பிரமாண பத்திரம் எழுதி வாங்கப்படுகிறது. இது, ஒவ்வொரு தேர்தலின்போதும் காவல்துறையால் பின்பற்றப்படும் நடைமுறை தான்.
ஆனால், இந்த தேர்தலில் சாதாரண வழக்கில் சிக்கிய அ.தி.மு.க., நிர்வாகிகளைக் கூட வேண்டுமென்றே காவல் நிலையத்துக்கு வரவழைத்து மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.
ஒருநாள் முழுவதும் காவல்நிலையத்தில் காத்திருக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 110ன்கீழ் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு துன்புறுத்துகிறார்கள்.
இதை அரசியல் உள்நோக்கத்தோடு பழிவாங்கும் செயலாக பார்க்கிறோம். அதேநேரம், தி.மு.க., நிர்வாகிகளின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், அவர்களிடம் எந்தவித பிரமாண பத்திரமும் வாங்கியதாக தகவல் இல்லை.
எனவே, இந்த விவகாரத்தில் டி.ஜி.பி.,க்கு தேர்தல் கமிஷன் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவிக்கப்பட வேண்டும். குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள தி.மு.க.,வினரின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து