ஸ்டாலினை போல மோடி நாடகம் ஆட மாட்டார்: நிர்மலா சீதாராமன்
"தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக வருகிறவர்களுக்கு அதற்கான உதவியை செய்து நல்லபடியாக தொழில் செய்வதற்கு இவர்கள் அனுமதிக்கவில்லை. மாறாக, அவர்களிடம் வசூல் செய்கிறார்கள்" என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நீலகிரி பா.ஜ., வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு பிரதமர் மோடி திட்டங்களைக் கொண்டு வருகிறார். நீலகிரி தொகுதியில் இருந்து வந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை கொடுத்தார். டில்லியில் பார்லிமென்டை மட்டும் மோடி கட்டவில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் தண்ணீர் வருகிறதா.. வீடு இருக்கிறதா, எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா எனப் பார்த்து பார்த்து செய்கிறார்.
நீலகிரி தொகுதியில் உள்ள தி.மு.க., மாவட்ட செயலாளருக்கும் எம்.எல்.ஏ.,வுக்கும் ஒத்துப் போவதில்லை. பின்தங்கிய சமூகத்தினரை இவர்கள் மதிப்பதில்லை. ஆனால், பொங்கல் விழாவை கொண்டாட குளிரிலும் எல்.முருகனின் வீட்டுக்கு மோடி சென்றார்.
இங்கு பின்தங்கிய வகுப்பை சேர்ந்த ஒருவரை சீட்டில் இருந்து அகற்றிவிட்டு, தன் வாரிசு அமைச்சரை முதல்வர் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார். ஆனால், பின்தங்கியவர்களை மனதில் வைத்து தான் நிறைய திட்டங்களை மோடி கொண்டு வருகிறார்.
பெண்களை முன்னிறுத்தி ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களைப் பற்றி யோசிக்கக் கூடிய தலைவராக மோடி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள அரசைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். பெண்களை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் எனப் பாருங்கள்.
'ஆயிரம் ரூபாயை தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே கொடுப்போம்' எனக் கூறியதைப் போல மோடி நாடகம் நடத்த மாட்டார். பெண்களைப் பதவிக்கு கொண்டு வருவது போல கொண்டு வந்துவிட்டு அவர்களை வேறு மாதிரி அவமதிப்பு செய்வதை அனுமதிக்க மாட்டார்.
ஒரு நகரத்தில் மேயராக தேர்வு செய்யப்பட்ட ஒரு பெண், எந்த மாதிரியான அவலநிலையில் இருக்கிறார் என்பதை சென்னையில் பார்க்கலாம். மேடையிலேயே அந்தப் பெண்ணை சீண்டுகின்றனர். அவர்களை கட்டுப்பாட்டில் அக்கட்சியின் தலைவர் வைக்கவில்லை. அப்படி கண்டித்ததாக ஒருநாளும் நாம் பார்த்ததில்லை.
தெருவில் ஒரு பெண் போதை காரணமாக புரண்ட கதையைக் கேட்டபோது மனம் வேதனைப்படுகிறது. நம்முடைய பெண்களுக்காக இந்த நிலைமை. கடந்த 20 வருடங்களில் முதலீடு செய்வதற்காக வருகிறவர்களுக்கு அதற்கான உதவியை செய்து நல்லபடியாக தொழில் செய்வதற்கு இவர்கள் அனுமதிக்கவில்லை.
'எங்களுக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்?' என வசூல் செய்கிறார்கள். தமிழகத்தில் வசூல் செய்வதற்காகவே தி.மு.க.,வினர் இருக்கின்றனர். இங்கு வசூல் அரசியல் எனக்கு கவலையளிக்கிறது. வசூல் அரசியலும் போதைப் பொருள்களை விற்கும் அரசாக இருக்கிறது. இது திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. டிரக்ஸ் முன்னேற்ற கழகம்.
இவர்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கக் கூடாது. மதுபானத்தையும் விற்போம். போதைப் பொருள்களையும் விற்போம். அதன் மூலம் வரும் ஆதாயத்தில் குடும்ப உறுப்பினர் வாயிலாக சினிமாவை தயாரிப்போம் என்கிறார்கள்.
'என் குடும்பம் எப்படியாவது வாழ வேண்டும். மக்கள் எப்படியாவது ஓட்டுப் போடுவார்கள்' என தி.மு.க., குடும்பம் நினைக்கிறது. 'நாங்கள் குடும்ப அரசியல் செய்வதாக திட்டுகிறார்கள்' என முதல்வர் பேசுகிறார். மேலும், 'மக்கள் ஆதரவு கொடுத்ததால் முதல்வராக இருக்கிறேன்' என்கிறார்.
மக்கள் ஆதரவு கொடுக்கும் வரையில் குடும்ப அரசியல் தப்பில்லை என மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், நாட்டு மக்களை தன் குடும்பமாக மோடி பார்க்கிறார். அவர் குடும்ப அரசியலை செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து