'அண்ணனுக்கு சூடா ஒரு ஊத்தப்பம்' பிரசாரத்தில் கலாய்த்து தள்ளும் விந்தியா
அ.தி.மு.க.,வில் பழனிசாமிக்கு அடுத்தபடியாக, கட்சியின் கொள்கை பரப்பு செயலர் விந்தியா, பிரசாரத்தில் கலக்கி வருகிறார்.
தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பேச்சுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், கட்சியினர் அவர் தங்கள் பகுதியில் பிரசாரத்துக்கு வர வேண்டும் என, வலியுறுத்தத் துவங்கி உள்ளனர்.
பிரசாரத்தில் அவர் பேசியவை:
தி.மு.க., உடன் கூட்டணி பேசிவிட்டு, கமல் வெளியில் வந்ததும், அவரது கட்சியினர், 'என்ன நிலைமை' என கேட்க,' நம்மை டார்ச் லைட்டில் நிற்க சொன்னாங்க' என, அவர் கூற, அவர்கள் ஆர்வமுடன் எத்தனை தொகுதி என கேட்க, 'தொகுதியில் இல்லை. கையில் டார்ச் லைட்டை பிடித்து கொண்டு நிற்க சொன்னாங்க' என்றாராம். தண்ணீர் படாமலே சாயம் போனவர் கமல்
இவர் ஒரு பக்கம் என்றால், வைகோ குறித்து என்ன கூறுவது? குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலையும் எதிர்த்து, தி.மு,க.,வில் இருந்து வெளியேறி ம.தி.மு.க., துவக்கினார். தற்போது அவர் வாரிசுக்காக ஒரு சீட்டுக்கு, ஸ்டாலினிடம் கையேந்தி உள்ளார். இவர்கள் தமிழக அரசியலுக்கு தேவையா?
இக்கூட்டணியில் உள்ள திருமாவளவனை பார்த்தால், வடிவேல் காமெடி வருகிறது. ஒரு படத்தில் வடிவேல், ஹோட்டலுக்கு சென்று, மொறு மொறுவென, நெய் ஊற்றி, வெங்காயம் துாக்கலா போட்டு ஒரு ஊத்தப்பம் தேவை என விலாவாரியாக கூறுவார். அனைத்தையும் கேட்ட சர்வர், அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என்பார்
காங்கிரஸ் ஒரு தனி வகை. அக்கட்சியில் தொகுதியில் நிற்க வைக்க வேட்பாளர் இல்லை. அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆறு சீட் போதும் என முடிவு செய்து, அதை துண்டு சீட்டில் எழுதி, ஸ்டாலினிடம் கொடுத்துள்ளனர். அதை தலைகீழாக படித்த ஸ்டாலின், ஒன்பது தொகுதி கொடுத்திட்டாரு. காங்கிரசுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை
இவர்கள் கூட்டணி சேர்ந்தால் என்னவாகும்? கரகாட்டக்காரன் படத்தில் வரும், ஓட்டை வண்டியாவது பேரீச்சம் பழத்துக்கு சேரும். தி.மு.க., கூட்டணி பைசாவுக்கு தேறாது.
பா.ஜ.,வினர் தமிழகத்தில் தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் மாற்று கட்சி என்கின்றனர். அது ஏமாற்றும் கட்சி. தி.மு.க., பயங்கரமா பொய் சொல்லும். பா.ஜ., சொல்கிற பொய்யை பயங்கரமா சொல்லும். தி.மு.க., திராவிட மாடல் என்று ஏமாற்றும். பா.ஜ., இந்தியா மாடல் என்று ஏமாற்றும்
சரத்குமார் பா.ஜ.,வில் சேருவார் என எதிர்பார்க்கவில்லை. விருதுநகரை நான் வைத்துக் கொள்கிறேன். கட்சியை நீ வைத்துக் கொள் எனக் கூறி கொடுத்து விட்டார்
அனைவரும் லலிதா ஜுவல்லரி விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதேபோல் பா.ஜ., அன்புமணியிடம், 'சீட்டும், ரேட்டும் சொல்கிறோம். மற்ற இடங்களில் சென்று விசாரியுங்கள். ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கு சரிப்பட்டு வராவிட்டால், எங்களிடம் வாருங்கள். நாம கூட்டணி வைத்துக் கொள்வோம்' என்றனராம்
கூட்டணியில் பன்னீர்செல்வமும், தினகரனும் பாவம். பன்னீர்செல்வம் இங்கு மரியாதையா வாழ்ந்தாரு. அங்கு அசிங்கப்பட்டு நிற்கிறாரு. தினகரன் ஒரு சீட் போதும் எனக் கூற, இரண்டு சீட் கொடுத்து பழி வாங்கிட்டாங்க
உதயநிதி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த, அதே செங்கலோடு பிரசாரத்துக்கு வருகிறார். அவருக்கு ஒரு பழக்கம். ஒன்று செங்கல்லை துாக்குவார். இல்லையெனில் ஷூட்டிங்கில் பெண்களை துாக்கி டூயட் பாடுவார். அதை தாண்டி அவருக்கு வேறு எதுவும் தெரியாது.
இவ்வாறு, அனைவரையும் கலாய்த்து வருகிறார்.
வாசகர் கருத்து