தமிழகத்தில் பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பழனிசாமி
"மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில் ஈடேறாது" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் முதல்வரிடம் கேள்வி எழுப்பினேன். அவர், பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
அறிக்கை வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் நழுவினார். இப்போது எஜமானர்களான உங்களிடமே வந்தேன்.
40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் கேள்விகளைக் கேட்டேன். இதற்குப் பதில் சொல்ல திராணியில்லாமல் என் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைத்தாத்.
அவர்கள் என்னைப் பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல திராணி இருந்ததா?
இல்லையெனில், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழகத்தைக் காக்கத் தவறிய பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஆட்சி தான், தி.மு.க., ஆட்சி.
ஒரு லோக்சபா உறுப்பினரின் அடிப்படைக் கடமையான தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?
இவர்கள் ஒருபுறம் என்றால், மாநிலத்தின் உரிமைகளை மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பா.ஜ., அரசு மறுபுறம் மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில் ஈடேறாது.
தி.மு.க.,வுக்கு வாக்களிப்பதும், பா.ஜ.,வுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்.பி.,க்கள் இருந்தும் மௌனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த தி.மு.க.,வையும் ஓங்கி அடிப்போம்.
அதேநேரம், அ.தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்கள் தமிழகத்தின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து