அ.தி.மு.க., பிரசாரத்தில் அடிதடி வாகனத்தின் கண்ணாடி உடைப்பு
பல்லாவரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தின்போது, இரு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. வேட்பாளர் பிரசார வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பாக மாறியது.
ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், பல்லாவரம் பகுதியில், முன்னாள்எம்.எல்.ஏ., தன்சிங் தலைமையில் நேற்று, வேன் பிரசாரம் மேற்கொண்டார்.
வேட்பாளரின் வாகனம், பல்லாவரம், மலங்கானந்தபுரத்திற்கு சென்றபோது, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி ராஜப்பா, அவர்களுக்கு வரவேற்பு கொடுப்பதற்காக, தன் ஆதரவாளர்களுடன் காத்திருந்தார்.
பிரசார வாகனம் சென்றதும், வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அங்குள்ள கோவிலில் வேட்பாளர் பிரேம்குமார் சுவாமி தரிசனம் நடந்தது. பின், வாகனத்தில் வேட்பாளர் ஏறியதும், அவரை தொடர்ந்து, ராஜப்பாவும் வாகனத்தின் ஏற முயன்றார்.
அப்போது, தன்சிங் ஆதரவாளர்கள், ராஜப்பாவை வாகனத்தில் ஏற விடாமல் தடுத்தனர்.
இதனால், இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாகனம் அங்கிருந்து புறப்பட்டபோது, ராஜப்பா ஆதரவாளர்கள், வாகனத்தை மறித்து, கோஷம் எழுப்பினர்.
காவல் துறையினரின் முன்னிலையிலேயே இந்த தகராறு நடந்ததால், பரபரப்பாக மாறியது. தொடர்ந்து, வாகனத்தில் ஏற்றப்பட்ட ராஜப்பாவுக்கும், தன்சிங்கிற்கும் இடையே வாகனத்திலேயே தகராறு ஏற்பட்டது.
இதைப்பார்த்து, அரசியலில் புதியவரான வேட்பாளர் பிரேம்குமார் செய்வதறியாமல் தவித்தார். பின், ராஜப்பாவிடம் வேட்பாளர் மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடித்து வைக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராஜப்பா கோஷ்டியினர், வேட்பாளர் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். போலீசார், இருதரப்பினரையும் கட்டுப்படுத்தினர். பின், ராஜப்பா இறங்கியதும், வேட்பாளர் வாகனம்அங்கிருந்து புறப்பட்டு, அடுத்த பகுதிக்கு சென்றது.
வாசகர் கருத்து