ஒருமுறை அழுத்தினால் பா.ஜ.,வுக்கு 2 ஓட்டு: காசர்கோடு சம்பவத்தில் என்ன நடந்தது?
நாடு முழுவதும் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் உள்ள சில தொகுதிகளில் நாளை முதல்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இதையொட்டி, கேரள மாநிலம் காசர்கோட்டில் நேற்று மாதிரி ஓட்டுப் பதிவு நடந்தது. அப்போது 4 மின்னணு ஓட்டு இயந்திரங்களில் ஒருமுறை ஓட்டுப் போட்டால் பா.ஜ.,வுக்கு 2 ஓட்டுகள் விழுந்ததாக கூறப்பட்டது. இது குறித்து காங்கிரசும் கம்யூ., கட்சிகளும் காசர்கோடு மாவட்ட தேர்தல் அலுவலர் இன்பசேகரிடம் புகார் தெரிவித்தன.
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் மற்ற சின்னங்களை விட காங்கிரசின் கை சின்னம் சிறிதாக இருந்தது. அதை மாற்றுமாறு கூறியுள்ளோம். காசர்கோட்டில் 9 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று நடந்த முதல்கட்ட மாதிரி சோதனையில் 190 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் 20 இயந்திரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது ஒவ்வொரு பட்டன்களும் தலா 1 முறை அழுத்தப்பட்டன. அப்போது 4 இயந்திரங்களில் மட்டும் பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில் ஒருமுறை அழுத்தினால் விவிபேட்டில் 2 ஓட்டுகள் பதிவானதாக சீட்டுகள் வந்தன. அதேநேரம், மற்ற சின்னங்களை அழுத்தினால் 1 முறை மட்டுமே பதிவாகிறது. இதே நிலைமை நீடித்தால் ஓட்டு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கேரள எதிர்க்கட்சிகளின் புகார் குறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், " முதல் இரண்டு முறை குறிப்பிட்ட 4 இயந்திரங்களில் பிரச்னை வந்தது. மூன்றாவது முறை பிரச்னை வரவில்லை. அதில், 1000 ஓட்டுகளை செலுத்திப் பார்த்தபோது கூட பிரச்னை வரவில்லை" என்றார்.
இந்நிலையில், 'ஓட்டுப் பதிவின் போது பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுச் சீட்டுகளையும் எண்ணி சரிபார்க்க வேண்டும்' எனத் தொடரப்பட்ட வழக்கின் போது. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது நீதிபதிகள், "ஒரு நபர் இரண்டு ஓட்டுகளைப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் கொடுத்த தேர்தல் கமிஷன், "முன்னதாக நடந்த மாதிரி ஓட்டுப் பதிவு சரியாக நீக்கப்படவில்லை என்றால் மட்டுமே அவ்வாறு நடக்க வாய்ப்பு இருக்கிறது" எனப் பதில் அளித்தது.
தொடர்ந்து, தேர்தல் கமிஷன் தெரிவித்த பதிலில், "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகளே இல்லை. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
காசர்கோட்டில் மாதிரி ஓட்டுப் பதிவின் போது தாமரை சின்னத்துக்கு கூடுதல் ஓட்டு பதிவானதாக வெளியான தகவலில் உண்மையில்லை. அது முற்றிலும் தவறானது" எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு நடத்துமாறு தேர்தல் கமிஷனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளை ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாசகர் கருத்து