Advertisement

ஒவ்வொரு தேர்தலுமே ஒரு புது அனுபவம் தான் : சத்யபிரதா சாஹு சிறப்பு பேட்டி



தேர்தலை சந்திப்பதையே மிகப்பெரிய சவாலான காரியமாக கட்சிகள் கருதும் சூழலில், அந்த தேர்தல் தொடர்பான அத்தனை பணிகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பது என்பது, எவ்வளவு பெரிய சவாலான வேலையாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஏழு கட்டங்களில், தமிழகம் சந்திக்கும் முதல் கட்ட தேர்தலுக்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து முடித்த திருப்தியில் இருக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி:

மூன்று பொதுத் தேர்தலை நடத்தி உள்ளீர்கள். கடந்த தேர்தல்களுக்கும், இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

கடந்த தேர்தல்களில் தபால் ஓட்டுகளை தபாலில் அனுப்ப வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. தபால் ஓட்டளிப்பவர்களை சிலர் நிர்ப்பந்தப்படுத்துவதாக வந்த புகார் அடிப்படையில், தபால் ஓட்டுகளை அதற்கான மையங்களில் குறிப்பிட்ட நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோல், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலுமே ஒரு புது அனுபவம் தான்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, கொரோனா பெருந்தொற்று பெரும் சிரமத்தை தந்தது. அனைவரும் ஒருவித பயத்துடனே பணிபுரிந்தோம். தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் போன்றோரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது, சற்று சிரமத்தை ஏற்படுத்தியது. இம்முறை அந்த பிரச்னை இல்லை; சுதந்திரமாக பணியாற்றுகிறோம்.

தேர்தலில் அரசியல் கட்சிகளிடம் இருந்து நிர்ப்பந்தம் எதுவும் வந்ததா?

அரசியல் கட்சிகளிடம் இருந்து, பல்வேறு புகார்கள் அவ்வப்போது வரும். அவர்கள் தரும் புகார்களை உரிய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன். அவர்களும் புகார்களின் தன்மைக்கேற்ப நடவடிக்கை எடுக்கின்றனர். சில புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. அவர்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளித்தால், ஏற்றுக் கொள்வர்.

உங்களை பொறுத்தவரை தேர்தல் பணி சுமையா, சுகமா?

தேர்தல் பணி எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. இது மிகவும் பொறுப்பான பணி. நான் அரசு துறைகளில் பல்வேறு பொறுப்பு களை வகித்துள்ளேன். அவற்றை விட இப்பணி கூடுதல் பொறுப்புடையது. ஜனநாயகத்தின் அடிப்படையான, தேர்தலை நடத்தும் பணி. அந்த பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறேன். நேர்மையாக, சுதந்திரமாக தேர்தல் நடத்த, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

தமிழகம் என்றாலே பணப் பட்டுவாடா என்ற பெயர் நாடு முழுதும் உள்ளது. இதை, தேர்தல் கமிஷனர்கள் எப்படி பார்க்கின்றனர்?

தமிழகத்தில் தேர்தலின்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படுவதில்லை. இதை தேர்தல் கமிஷனர்கள் பெருமையாக குறிப்பிடுவர். மறு ஓட்டுப்பதிவு, ஓட்டுச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், ஓட்டுக்கு பணம் கொடுப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது.

பணப் பட்டுவாடாவை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது. வருமான வரித் துறையினரும் சோதனை நடத்துகின்றனர். பணம் எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது.

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு சோதனையில், அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக, வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. சோதனையின்போது தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதுடன், மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம்.

பட்டுவாடாவை தடுக்க, இத்தகைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. மிகப் பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதாக, ஒன்றிரண்டு புகார்கள் மட்டுமே வந்தன. தகவல் வந்ததும், உடனடி யாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனவே?

இதை தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஓட்டுப்பதிவு முடிந்ததும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், சட்டசபை தொகுதிக்கு தலா மூன்று என்பது ஒன்றாக குறைக்கப்படும்.

தேர்தலையொட்டி மக்களுக்கு நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்ன?

மக்கள் அனைவரும் முதலில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஓட்டுச்சாவடி எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கு, 'பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது. அதில் ஓட்டுச்சாவடி பெயர், அமைவிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூத் சிலிப் கிடைக்காதவர்கள், 'Voter Helpline' மொபைல் செயலி மற்றும் தேர்தல் கமிஷன் இணையதளம் வழியே, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா; எந்த ஓட்டுச்சாவடி என்ற விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏனெனில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருந்தால், ஓட்டுச்சாவடி மாறி இருக்க வாய்ப்புள்ளது. அதை அறிந்து கொண்டு, அனைவரும் தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டும். ஓட்டளிப்பதற்கு வசதியாக, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும், பொது மக்கள் நிழலில் நிற்க ஷாமியானா பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.

முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் யாரேனும் கொடுத்தால், 'சி விஜில்' மொபைல் செயலி வழியே புகார் அளிக்கலாம் அல்லது 1950 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தேர்தல் பொது பார்வையாளர், செலவினப் பார்வையாளர், போலீஸ் பார்வையாளர் ஆகியோரிடமும் புகார் அளிக்கலாம்.

தேர்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல் பாடினீர்கள். பாடல் அனுபவம் எப்படி; அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

தேர்தல் விழிப்புணர்வு பாடல் வரிகள் குறித்து, இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் பேசும்போது, 'நீங்களே பாடுங்கள் சார்' என்றார். அவர் அளித்த ஊக்கம் காரணமாக, அந்தப் பாடலை பாடினேன். அனைவரும் பாராட்டினர். தலைமை தேர்தல் கமிஷனரும் பாடலுக்கு பாராட்டு தெரிவித்து செய்தி அனுப்பி உள்ளார். இது மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பாக, ஓட்டுப்பதிவு நிறுத்தம் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இம்முறை அதற்கு வாய்ப்புண்டா?

ஒரு சில புகார்கள் வந்தன. அவற்றின் மீது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரிய அளவில் எதுவும் இல்லை.

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு தேர்தலிலும் எழுகின்றன. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை பார்க்காமல், தேர்தல் அன்று பெயர் இல்லை என, ஒரு சிலர் புகார் தெரிவிக்கின்றனர். அவர்கள் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, தங்கள் பெயர் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அதேபோல் அரசியல் கட்சிகளும், தவறு இருந்தால் முன்னதாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.

தற்போது ஒருவர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவரது புகைப்படம், பெயர், முகவரி போன்றவற்றை ஒப்பிட்டு, எத்தனை இடங்களில் உள்ளது என்பதை அறிந்து, அவர் ஒப்புதலோடு ஒரு இடம் தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள பெயர் நீக்கப்படுகிறது.

வாக்காளர்களிடம் ஆதார் எண் பெற்றீர்கள். அதை ஏன் வாக்காளர் பட்டியலுடன் இணைக்காமல் உள்ளீர்கள்?

தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண்கள் பெறப்பட்டுஉள்ளன. அதை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தேர்தல் கமிஷன் இன்னும் உத்தரவு வழங்கவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்