Advertisement

தி.மு.க., பிரசாரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவு: தகவல் அறிந்ததும் தலைமை அதிர்ச்சி

மதுரையில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நகருக்கு உட்பட்ட மதுரை வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., இளைஞரணி சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட நடுநிலை இளைஞர், பெண்கள் என, 1 லட்சம் பேரை தனித்தனியே சந்தித்தனர்.

அவர்களிடம் ஆளுங்கட்சி திட்டங்களை விளக்கிய பின், தற்போதைய அரசியல்களம் குறித்து 'பீட்பேக்' கேட்டு பதிவு செய்துள்ளனர். அதில் ஆளுங்கட்சி திட்டங்களை பாராட்டிய இளைஞர்களில் ஒரு பகுதி பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பேச்சு, செயல்பாடு தங்களை ஈர்த்துள்ளதாக தெரிவித்த கருத்துக்களை அதிர்ச்சியுடன் கேட்டு, ஆளுங்கட்சியின் கவனத்திற்கு இளைஞரணி கொண்டு சென்றுள்ளது.

இதுகுறித்து மதுரை நகர் இளைஞரணி அமைப்பாளர் சவுந்தர் கூறியதாவது:

அமைச்சர் உதயநிதி உத்தரவின்பேரில் இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இளைஞரணி நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளோம்.

மதுரை நகரில் நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட 72 மாநகராட்சி வார்டுகளில் வார்டுக்கு தலா 25 இளைஞரணி உறுப்பினர்கள் வட்ட, பகுதி செயலர்கள் துணையுடன் ஒரு மாதம் தொடர் பிரசாரம் செய்தோம். இதில், 'மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன்' என பிரதான ஐந்து திட்டங்களின் சாதனைகளை விளக்கினோம். மேலும், '29 பைசா பிரதமர்' என மோடியை ஏன் உதயநிதி அழைக்கிறார் என்பதையும் அவர்களிடம் தெளிவுபடுத்தினோம்.

அவர்களுடனான நேரடி கலந்துரையாடல்களில் கள நிலவரத்தில் உள்ள பல விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக மத்திய அரசு திட்டங்கள் இளைஞர்களை எட்டவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்குவோம் என்ற பா.ஜ., வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதில் இளைஞர்கள் தெளிவாக உள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை தெரிவித்தனர். அவர்கள் விபரம் சேகரித்துள்ளோம். தேர்தலுக்குப் பின் உரிமை தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் சில செயல்பாடுகள் சரியாக உள்ளதாகவும், நன்றாக பேசுகிறார் எனவும் இளைஞர்கள் சிலர் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. அவர்களிடம் தி.மு.க., சாதனைகளை சற்று விரிவாக விளக்கி பிரசாரம் செய்தோம். எங்கள் பிரசாரத்தில் 40,000 வீடுகளில், 'களத்தில் தி.மு.க., இளைஞரணி' என்ற ஸ்டிக்கரை ஒட்டியுள்ளோம் என்றார்.

தி.மு.க., இளைஞரணி பிரசாரத்தில், அண்ணாமலைக்கு இளைஞர்களிடையே வரவேற்பு உள்ள விஷயம் குறித்து அறிந்து, தி.மு.க., அதிர்ச்சி ஆகியுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்