தி.மு.க., கூட்டணியினர் ஒத்துழைப்பு இல்லை: நாமக்கல் கொ.ம.தே.க., வேட்பாளருக்கு அல்லல்
நாமக்கல் லோக்சபா தொகுதியில், முதலில் அறிவிக்கப்பட்ட கொ.ம.தே.க., வேட்பாளரை மாற்றியதால், அக்கட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், கட்சி பொதுச்செயலரே பிரசாரத்தில் பங்கேற்காததும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் லோக்சபா தொகுதி, தி.மு.க., தலைமையிலான 'இண்டியா' கூட்டணியில், கொ.ம.தே.க.,வுக்கு, மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலர் மாதேஸ்வரன் வேட்பாளராக களத்தில் உள்ளார்.
கொ.ம.தே.க., வேட்பாளராக, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலர் சூரியமூர்த்தி முதலில் அறிவிக்கப்பட்டார். அவர் சர்ச்சைக்குரியதாக பேசிய பழைய வீடியோ, மீண்டும் பரப்பப்பட்டு, விவகாரமானதால் நீக்கப்பட்டார்.
தனி ஆவர்த்தனம்
சூரியமூர்த்தி மாற்றப்பட்டதால், அக்கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு, நாமக்கல் கொங்கு இளைஞரணியை சேர்ந்த, நாமக்கல் நல்லிபாளையம் சதீஷ், 40, சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். அவர், தங்களது சமூகத்தினர் மட்டும் இன்றி, பல்வேறு சமூகத்தினரையும் சந்தித்து ஓட்டு சேகரிப்பதால், ஓட்டுகள் சிதறும் நிலை உள்ளது. நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் அசோகன், புறநகர் மாவட்டம், மோகனுார் மேற்கு ஒன்றிய செயலர் வாங்கலி உள்பட பலர், கொ.ம.தே.க.,வில் இருந்து ஏற்கனவே விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். இது, அக்கட்சியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த தொகுதி, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தி.மு.க., நிர்வாகிகள் கடும் அதிருப்தியுடன் பட்டும் படாமல் பணியாற்றி வருகின்றனர். தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பலரும், கொ.ம.தே.க., வேட்பாளருடன் செல்லாமல், தனித்தனியாக பிரசாரம் செய்து தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.
மேலும், கொ.ம..தே.க., வேட்பாளருக்கு, கூட்டணி கட்சியினரின் பிரசார விபரமும் தெரிவிக்கப்படுவதில்லை. தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையின், நாமக்கல் மாவட்ட பிரசாரத்தின் போது, வேட்பாளருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.
இதுகுறித்து, கொ.ம.தே.க., நிர்வாகிகள் கூறியதாவது:
முதலில் வேட்பாளராக அறிவித்த சூரியமூர்த்தியை மாற்றியதன் மூலம், பாதி தோல்வி அடைந்துவிட்டோம். தற்போதைய வேட்பாளருக்கு அவரது சொந்த ஊரிலேயே ஓட்டு போடமாட்டார்கள். தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,- கம்யூ.,- வி.சி., தமிழ் புலிகள் கட்சி, காங்., என, பெரும் படை இருந்தும், தேர்தல் பிரசாரத்தில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுதுடன் சரி. ஒரு சில இடங்களில் தேர்தல் பிரசாரத்தில், வேட்பாளருடன் பங்கேற்றார். மற்ற இடங்களுக்கு இதுவரை செல்லவில்லை. ஒரு கட்சியின் பொதுச்செயலர், ஒரு சீட்டு பெற்றும், தொகுதியில் கவனம் செலுத்தாமல், இருப்பது எங்கள் கட்சிக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மிதப்பில் தலைமை
மொத்தத்தில், நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வை நம்பியே கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
கொங்கு இளைஞரணி பிரமுகரும் சுயேச்சையாக போட்டியிடுவதால், எங்கள் சமுதாய ஓட்டுகள் சிதற வாய்ப்புள்ளது. கடந்த முறை போல் வெற்றி பெற்று விடுவோம் என, எங்கள் கட்சி தலைமை மிதப்பில் உள்ளது. தேர்தலுக்காக தீவிரமாக உழைத்தாலும், பிரசாரம் செய்தாலும் கூட வெற்றி இலக்கை எட்டுவது மிக கடினம். இதையே தமிழக உளவுத்துறையும், அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. அதன் பின்னரும் எங்கள் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தவில்லை.
இவ்வாறு தெரிவித்தனர்.
வாசகர் கருத்து