எங்கிருந்தோ வந்த கிளி: தி.மு.க., பிரசாரத்தில் 'கிலி'
மதுரையில் மா.கம்யூ., வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி வார்டு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் கணவரும் தி.மு.க., பகுதி செயலருமான பொன்வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
சண்முகப்பிள்ளை தோப்பு குடியிருப்பு பகுதியில் அவர்கள் நடந்து சென்றபோது, எங்கிருந்தோ ஒரு பச்சை கிளி பறந்து வந்து மேயரின் கைகளில் அமர்ந்தது. சில நொடிகளில் பொன்வசந்த் கைக்கும் தாவியது. பிரசாரத்தை சற்றுநேரம் நிறுத்திவிட்டு கிளி எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, அப்பகுதி சுவர் மீது இறக்கி விட்டு மேயர் தரப்பினர் பிரசாரத்தை தொடர்ந்தனர். கைகளில் கிளி அமர்ந்ததை அவர்களுடன் பிரசாரத்தில் வந்த கட்சியினர் சிலர் அலைபேசியில் போட்டோ எடுத்து பரப்பி விட்டனர்.
இதையடுத்து 'மதுரை மேயர் தேர்தல் பிரசாரத்தில் கிளியை பயன்படுத்தினார்' என தகவல் பரவியது. 'பாதுகாக்கப்பட்ட பறவைகள் பட்டியலில் கிளியும் இடம்பெற்றுள்ளது. மேயர் பிரசாரத்தில் எப்படி கிளியை பயன்படுத்தலாம். வனத்துறை சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து மேயர் கூறுகையில், ''எங்கிருந்தோ வந்த கிளிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அதை அங்கேயே விட்டு விட்டோம்'' என்றார்.
இதற்கிடையே அந்த கிளியை தற்போது வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலுாரில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் கிளி ஜோசியம் கேட்டதும், அதில் கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் பிரபலமாகி விட்டதால், மதுரையில் கிளியால் தி.மு.க.,வினரும் கிலியில் இருக்கின்றனர்.
வாசகர் கருத்து