ஒரு ஓட்டுக்கு 3 நோட்டு: தி.மு.க., புதிய பார்முலா
தமிழக தேர்தல் களத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இடையில் நாளை ஒருநாள் மட்டுமே ஓட்டுப்பதிவுக்கு உள்ளதால், கடந்த, இரு நாட்களாக வாக்காளர்கள் பணமழையில் குளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் ஆலோசனை வழங்கியது. அவர்கள் சொற்படி செயலாற்றிய தி,மு.க., வெற்றி பெற்றது. அந்த நிறுவனம் தற்போது தி.மு.க.,வுக்காக தேர்தல் பணியாற்றவில்லை.
அதே நேரம் அந்த நிறுவனத்தில் பணியாற்றியவர்களை கொண்டு, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உறவினர்களை கொண்டு நடத்தும் நிறுவனம், தி.மு.க.,வின் முழு தேர்தல் செயல்பாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
முதல் கட்டம் முடிந்தது
அந்த நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர்களை கவர பணப்பட்டு வாடாவை வீடுவீடாக கொண்டு சேர்க்க, 20 வீடுகளுக்கு இருவர் என்ற ரீதியில் பிரித்து கொடுத்து பணியாற்றுகின்றனர். இவர்கள், 'ஒரு ஓட்டுக்கு மூன்று நோட்டு' என்ற பார்முலா அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்கின்றனர்.
அதன்படி தி.மு.க.,விசுவாசிகள் என்றால், ஓட்டுக்கு மூன்று 100 ரூபாய், அதாவது, 300 ரூபாய்; நடுநிலையாளர்கள் என்றால் ஓட்டுக்கு மூன்று 200 ரூபாய்; அதாவது, 600 ரூபாய். எதிர்க்கட்சியினர் என தெரிந்தால் அவர்களை வளைக்க ஓட்டுக்கு, மூன்று 500 ரூபாய், அதாவது, 1,500 ரூபாய் வரை வழங்கியுள்ளனர். முதற்கட்ட பட்டுவாடா முடிந்து விட்டது. நாளை இரவுக்குள் இரண்டாவது கட்ட பட்டுவாடாவும் முழுமையாக முடிந்துவிடும்.
மொத்த வாக்காளர்களில், 70 சதவீதம் பேருக்கு பணம் சேரும்படி திட்டம் வகுத்து கொடுத்துள்ளனர். அதன்படி பணப்பட்டுவாடா ஜரூராக நடந்துள்ளது.
பணப்பட்டுவாடாவின் போது, கோவை, நீலகிரி, திருநெல்வேலி என, பா.ஜ.,- வி.ஐ.பி., வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதை சமாளிக்க பறக்கும் படையினர் சோதனை நடத்தாமல் இருக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தி.மு.க., பணப்பட்டுவாடா செய்வதில் தீவிரம் காட்டி வரும் நேரத்தில், அ.தி.மு.க.,வும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு, 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை வழங்கி வருகின்றனர். ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய்; மூன்று அல்லது அதற்கு மேல் ஓட்டு இருந்தால், 1,000, 1,500 ரூபாய் வழங்குகின்றனர். 'தேர்தலுக்கு முதல் நாள் மீண்டும் வருவோம்' என்ற வாக்குறுதி அளிக்கின்றனர்.
கவுரவ பிரச்னை
கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உட்பட பா.ஜ., போட்டியிடும் தொகுதியிலும், பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., - த.மா.கா., தொகுதியிலும், 'கவுரவ பிரச்னையாக' ஒரு ஓட்டுக்கு, 200 துவங்கி, 500 ரூபாய் வரை வழங்குகின்றனர். சில கிராமங்கள், காலனி, விரிவாக்க பகுதிகளில் கோவிலுக்கும், சங்கத்துக்கும், பொதுவாகவும், 10,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரையிலும் வழங்கி குளிர்வித்து வருகின்றனர்.
வரும், 19ல் ஓட்டுப்பதிவு என்பதால் இன்றும், நாளையும் பண மழை, அடைமழையாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் கேட்டபோது, ''அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதாக பரஸ்பரம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், ஆதாரம் எதையும் வழங்கவில்லை. அரசியல் கட்சிகளிடம் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளோம். எனவே, ஓட்டுக்காக யாரேனும் பணம் மற்றும் பரிசுப் பொருள் கொடுத்தால், பொதுமக்கள் 'சி - விஜில்' மொபைல் செயலியில் படம் மற்றும் வீடியோ பதிவு அனுப்பினால், உடனடியாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
வாசகர் கருத்து