இனியாவது ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுங்கள்!: தேர்தல் அதிகாரியிடம் கோவை மக்கள் ஒருமித்த குரல்
கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்திகுமாரை நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில், 'வாக்காளர்களை கவர்ந்து குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டளிக்க, பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. தடுக்க முயற்சிக்கும்போது, மிரட்டப்படுகிறோம். வெளிப்படையான பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர். மனுவுடன், பணம் பட்டுவாடா செய்தவரை பிடித்த வீடியோவையும், கலெக்டரிடம் வழங்கினர்.
மிரட்டல்
அதன்பின், பொதுமக்கள் கூறியதாவது:
கல்வீரம்பாளையத்தில் வசிக்கிறோம்; எங்கள் வீட்டுக்கு வந்த குறிப்பிட்ட கட்சியினர், எங்கள் வேட்பாளருக்கு ஓட்டுப் போடாவிட்டால் குடிநீர், மின் இணைப்பை துண்டிப்போம் என மிரட்டுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் சுப்ர மணியபாளையத்தில் ஒரு வீட்டில் பணம் கொடுத்ததை வீடியோ எடுத்து, ஆதாரமாக வழங்கியுள்ளோம். சவுரிபாளையம், சூலுார் பகுதியிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பை துண்டித்து, பணம் கொடுத்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். விசாரித்தபோது, தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என அவரே கூறினார். இப்பொழுது வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
பணம் வேண்டாம் என கூறினால், எங்களது 'பூத் சிலிப்' விபரங்களை குறிப்பெடுக்கின்றனர். குனியமுத்துாரில் தர்மராஜா கோவில் அருகே மக்களை வரச் சொல்லியிருக்கின்றனர். ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பூத் சிலிப் கொடுப்பதை போல், பணம் கொடுக்கின்றனர்.
எல்லா இடத்திலும் பணம் கொடுப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்க முடியாது. வீட்டுக்கு, நிறுவனங்களுக்கு பொருள் வாங்கச் செல்லும் போது பிடிக்கும் பறக்கும் படையினர், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பிடிப்பதில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'எப்.ஐ.ஆர்., போடுறாங்க'
மாவட்ட தேர்தல் அதிகாரி யான, கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''பொதுமக்கள் கொடுத்த மனு, வீடியோ ஆய்வு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும்.
மீதமுள்ள நான்கு இடங்களில் பணம் பட்டுவாடா செய்வதாகக் கூறியுள்ளனர்; ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை. பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வருமான வரித்துறையினர் சில இடங்களில் சோதனை செய்து, பறிமுதல் செய்திருக்கின்றனர்,'' என்றார்.
மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:தி.மு.க., வேட்பாளருக்காக, வீடு வீடாகச் சென்று பணம் கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஏற்கனவே மனு கொடுத்திருக்கிறோம்; இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.வெளிப்படையாக பணம் கொடுக்கப்படுகிறது; எதற்காக தேர்தல் நடத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து ஏலம் விட்டு விடலாம். தேர்தலை நிறுத்த வேண்டும் அல்லது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்விரண்டும் செய்யாவிட்டால், இத்தேர்தலை நடத்துவது வேஸ்ட். இதை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து