ஸ்பெஷல் ரோடால் சிக்கல்: தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க உறுதி
நேற்று முன்தினம் கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து காரில், ஹோப்ஸ் காலேஜ், சிங்காநல்லுார், வெள்ளலுார் வழியாக செட்டிபாளையம் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் சூலுார் வழியாக திருப்பூர் சென்றார்.
இக்கூட்டத்துக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் ராகுல் கோவை வந்தார். இவரும், ஸ்டாலின் சென்ற வழித்தடத்திலேயே காரில் பயணித்தார்.
இவ்விருவர் பயணத்துக்காக, வெள்ளலுார் சாலையில் ஆங்காங்கே இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டு இருந்தன.
குண்டும் குழியுமாக இருந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டு, 'பேட்ச் ஒர்க்'செய்யப்பட்டு இருந்தன.
வெள்ளலுாரில் இருந்து செட்டிபாளையம் செல்ல, இரு வழித்தடங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. வெள்ளலுார் கறிக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் புதிதாக சாலை போடப்பட்டு இருந்தது.
பைபாஸ் சந்திக்கும் இடத்தில் இருந்து, பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் வரையிலான துாரத்துக்கு ஸ்பெஷலாக புதிதாக சாலை போடப்பட்டு, இருபுறமும் இரும்பு கிரில் தடுப்புவைக்கப்பட்டு இருந்தது.
சாலை அமைக்கப்பட்டது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டபோது அவர், ''எல் அண்டு டி பைபாஸ் அருகே, அரசு சார்பில் சாலை போடவில்லை.
''நிகழ்ச்சி நடத்தியவர்கள், அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். இந்திய தேர்தல் ஆணைய விதிமுறையை பின்பற்றி, செலவினங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.
வாசகர் கருத்து