அ.தி.மு.க., வேட்பாளருக்கு அரிவாள், சுத்தியல் ஆதரவு
மதுரையில் மா.கம்யூ., கட்சி சார்பில் வெங்கடேசனும், அ.தி.மு.க., சார்பில் சரவணனும் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, 'கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி' பிரசாரம் செய்து வருகிறது. அ.தி.மு.க., பிரசாரத்தில் தங்கள் கட்சி சின்னத்தை பயன்படுத்தி மக்களை குழப்பம் ஏற்படுத்துவதாக மா.கம்யூ., கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி மாநில அமைப்புச் செயலர் சிவக்குமார் கூறியதாவது:
எங்கள் கட்சி கொடி, அரிவாள், சுத்தியல், நட்சத்திரம். இது உலக அளவில் கம்யூ., கட்சிக்கான கொடி. இதை தங்கள் சின்னமாக மா.கம்யூ., கட்சி வைத்துக் கொண்டது. சர்வதேச அளவில் தொழிலாளர்கள் போராடி பெற்றதை தங்கள் சின்னமாக அறிவித்துக் கொண்டது தவறு.
கம்யூ., கட்சிகள் பிரிந்தபோது இந்திய கம்யூ., கட்சி தங்கள் சின்னமாக கதிரை அரிவாளுடன் சேர்த்து வைத்துக் கொண்டது. அதுபோல் மா.கம்யூ., அரிவாள், சுத்தியலுடன் வேறு ஒரு பொருளை சேர்த்து சின்னமாக வைத்திருக்கலாமே. கம்யூ., கொடியை தங்களை தவிர மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல, அவர்கள் என்ன கம்யூ., கொடியை குத்தகைக்கா எடுத்துள்ளனர்?
நாங்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, போட்டி வேட்பாளரின் சின்னத்தை பயன்படுத்தி மக்களிடம் எப்படி ஓட்டுக் கேட்க முடியும். அப்படி சென்றால் எதிர்க்கட்சிக்கு அல்லவா ஓட்டு கேட்பது போல் ஆகிவிடும். அப்படி செய்தால் யாருக்கு பாதிப்பு ஏற்படும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஒரு கம்யூ., கட்சி பிரசாரம் செய்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து