ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கால்குலேட்டர் தலைமை முகவர்கள் வேண்டுகோள்
திருப்பூர்;ஓட்டு எண்ணிக்கை மையத்தில், தலைமை முகவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்ட லோக்சபா தேர்தல் முடிவடைந்து, வரும் ஜூலை 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது.
சட்டசபை தொகுதிக்கு 14 வீதம், ஆறு சட்டசபை தொகுக்கான ஓட்டுக்கள் 84 டேபிள்களிலும்; தபால் ஓட்டுக்கள் 8 டேபிள்களில் என, மொத்தம் 92 டேபிளில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை பணி களுக்கு, நுண்பார்வையாளர்கள் 120 பேர்; ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர் 102 பேர்; உதவி மேற்பார்வையாளர் 102 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு, கல்லுாரியின் நிர்வாக பிரிவு கட்டடத்தின் இரண்டாம் தளம், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு கட்டட தரைத்தளம், பெருந்துறைக்கு, அண்ணா நுாற்றாண்டு கட்டட முதல்தளம்.
பவானிக்கு அண்ணா நுாற்றாண்டு கட்டட இரண் டாம் தளம், அந்தியூருக்கு ரூசோ கட்டட முதல் தளம், கோபி தொகுதிக்கு ரூசோ கட்ட தரைதளத்திலும், தபால் ஓட்டுக்கள்; நிர்வாக பிரிவு தரைதளத்திலும் நடைபெறும்.
ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இதையடுத்து, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மையத்தில், ஓட்டு எண்ணிக்கைக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அந்தந்த சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை அரங்குகளுக்கு, முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் செல்வதற்காக, பேரிகார்டுகள் வைக்கப்பட்டு தனித்தனி டிராக் அமைக்கப்படுகிறது.
ஆறு சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை விவரங்களை தொகுக்கும் மாவட்ட கட்டப்பாட்டு அறை, தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறை, தேர்தல் அலுவலர் அறை, முகவர்கள் அறை, ஊடக அறைகள் அமைக்கப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை வசதிகள் குறித்து, வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
போலீஸ்கமிஷனர் பிரவின்குமார் அபினபு, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப் - கலெக்டர் சவுமியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து