கல்லுாரி ஆட்களை களமிறக்கிய ஜெகத்: பரிசு அனுப்புவதால் வாக்காளர்கள் குஷி
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க., சார்பில் ஏ.எல்.விஜயன், பா.ம.க., சார்பில் வழக்கறிஞர் பாலு ஆகியோர் இடையே, மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
மூன்று வேட்பாளர்களும் ஆறு சட்டசபை தொகுதிகளில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், தன் கட்சி நிர்வாகிகளை, ஒவ்வொரு வார்டுக்கும் வாக்காளர் பட்டியலுடன் சென்று, வாக்காளர்கள் குறித்து விபரம் சேகரித்து வர உத்தரவிட்டு உள்ளார்.
தற்போதுள்ள மொத்த வாக்காளர்கள் எத்தனை பேர், அவர்கள் உயிருடன் உள்ளனரா, இடம் மாறியுள்ளனரா போன்ற விபரங்களுடன், வாக்காளர்களின் மொபைல் போன் எண்ணும் சேகரிக்கப்படுகிறது.
பரிசு பொட்டலங்கள்
இதுகுறித்து, தி.முக.,வினர் கூறியதாவது:
ஜெகத்ரட்சகன், 100 சதவீதம் வாக்காளருக்கும் பரிசு பொட்டலம் வாயிலாக 'கவனிப்பு' செய்து, அவர்களை தனக்கு ஓட்டளிக்கச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
மற்ற வேட்பாளர்கள் கவனிப்பைக் கடந்து கூடுதலாக வாக்காளர்களை கூடுதல் பொட்டலங்கள் கொடுத்து கவனிக்கவும் முடிவெடுத்து உள்ளார். இதற்காக, பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அதேநேரம் கட்சி நிர்வாகிகள் வாயிலாக, வாக்காளர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக, வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஏற்பாடு செய்யும் பொட்டலங்கள் முறையாக போய் சேர்கிறதா என்பதை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, அவருக்கு சொந்தமான கல்லுாரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, இருநுாறு பேரை அரக்கோணம் தொகுதியில் களம் இறக்கியுள்ளார் ஜெகத்ரட்சகன்.
இவர்கள், அங்கிருக்கும் தி.மு.க., நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் வைத்து ஒவ்வொருவரையும் வீடு தேடிச் சென்று சரிபார்க்கின்றனர். பின், அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாயிலாக பொட்டலங்களை அனுப்பி வைக்கின்றனர்.
உற்சாகம்
பின், தனியாக சென்று வாக்காளர்களை சந்தித்து, கொடுத்தனுப்பிய பொட்டலம் சரியான எண்ணிக்கையில் வந்து சேர்ந்ததா என கேட்டு உறுதிசெய்கின்றனர். எங்கெல்லாம் பிரச்னைகள் என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் உடனடியாக அதை சரி செய்கின்றனர்.
நேரில் அணுக முடியாத வாக்காளர்களை ஏற்கனவே வாக்காளர் பட்டியலோடு வாங்கி வைத்திருக்கும் மொபைல் எண் வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, பொட்டலங்களை சேர்க்க ஏற்பாடு செய்கின்றனர்.
ஒவ்வொரு வார்டிலும் இப்படி பணிகள் முறையாக நடப்பதால், வேட்பாளர் ஜெகத்ரட்சகன் உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதை எப்படி தடுப்பது என புரியாமல், எதிரணி வேட்பாளர்கள் தவித்துவருகின்றனர்.
வாசகர் கருத்து