வி.ஐ.பி., வேட்பாளருக்கு ரூ.200 கோடி: பிடிபட்ட ஹவாலா ஏஜென்ட் வாக்குமூலம்
வெளிநாடுகளில் உள்ள வைர வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொடுத்து, அவற்றுக்கு பதிலாக, 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை, தமிழக வி.ஐ.பி., வேட்பாளருக்காக கொண்டு வர திட்டமிடப்பட்ட தகவல் அம்பலமாகி உள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். இவர், ஹவாலா பண பரிமாற்ற சர்வதேச கும்பலின் முக்கிய புள்ளி. 'ஈ.சி.ஆர்., வினோத்' என, அழைக்கப்படும் இவர், வெளிநாடுகளில் உள்ள, தொழில் அதிபர்களிடம் தங்கம் மற்றும் வைர நகைகளை ஒப்படைத்து, ஹவாலா பணம் புரட்டும் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன், ஜோசப் சுற்றுலா விசாவில், சென்னையில் இருந்து மலேஷியா வழியாக துபாய் செல்ல முயன்றார். சந்தேகம் அடைந்த மலேஷிய குடியுரிமை அதிகாரிகள் இவரை பிடித்து விசாரித்தனர். அதில் இவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஏப்., 7ம் தேதி ஜோசப்பை மலேஷிய குடியுரிமை அதிகாரிகள் நாடு கடத்தி, சென்னைக்கு திருப்பி அனுப்பினர். மேலும், இவர் குறித்து மத்திய உளவு துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், ஜோசப்பை பிடித்தனர். அவருடைய மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஐ - பேட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர். அப்போது, மலேஷியாவில் உள்ள சுரேஷ், துபாயில் உள்ள செல்வம் ஆகியோரிடம் அடிக்கடி பேசி உள்ள தகவல் கிடைத்தது. 'வாட்ஸாப், டெலிகிராம்' வாயிலாக, பண பரிமாற்றம் தொடர்பாக வெளிநாடுகளில் இருப்போரிடம் பேசியது தெரிய வந்தது.
ஜோசப் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக மாநில அரசியல் கட்சி ஒன்றின், வி.ஐ.பி., வேட்பாளர் ஒருவரின் வலதுகரமாக அப்பு என்ற விநாயகவேலன் செயல்பட்டு வருகிறார். அப்பு, அந்த வேட்பாளரின் பணத்தை வெளிநாடுகளில் இருந்து பத்திரமாக தமிழகம் கொண்டு வரும் பணிகளை கவனித்து வருகிறார்.
அப்பு, ஜோசப்பின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார். ஜன., மாதம், இருவரும் சந்தித்தனர். அப்போது, துபாயில் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை, ஹவாலா மூலம் தமிழகம் எடுத்து வர வேண்டும் என்று பேசிக்கொண்டனர்.
இதற்கு, மலேஷியாவில் உள்ள புரோக்கர் சுரேஷ் மிகவும் கெட்டிக்காரராக இருப்பது தெரிந்து, அவரை தொடர்பு கொண்டு ஜோசப் பேசினார். சுரேஷ் தன் நெட்வொர்க்கில் இருக்கும் துபாயைச் சேர்ந்த தங்க வியாபாரியான செல்வத்தை அறிமுகப்படுத்தினார். துபாயில் உள்ள செல்வத்திடம் பணத்தை கொடுத்தால், அவர் அதற்கு நிகரான தங்க கட்டிகளை கொடுத்துவிடுவார். அந்த தங்க கட்டிகளை குறிப்பிட்ட ஒரு வைர வியாபாரியிடம் கொடுத்து, ஹவாலா வாயிலாக பணமாக மாற்றிக் கொள்ளலாம் என, சுரேஷ் ஆலோசனை வழங்கினார்.
அதையடுத்து, முதலில் மலேஷியா சென்று சுரேஷை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே ஜோசப், மலேஷியா சென்றார். பின், துபாய்க்கு சென்று செல்வத்தை சந்திப்பதோடு, அவரிடம் இருந்த 200 கோடி ரூபாய்க்கான தங்க கட்டிகளை வாங்கி, அங்குள்ள வைர வியாபாரியான மோனிகா வரோலாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஜோசப் திட்டம்.
மோனிகா வரோலாவிடம் தங்க கட்டிகளை ஒப்படைத்து விட்டால், சென்னையில் இருக்கும் அவரது தொழில் பார்ட்னர்கள் வாயிலாக, அப்பு என்ற விநாயக வேலனுக்கு, 200 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாற்றி விடுவதற்கும் திட்டம் போட்டுள்ளனர்.
இதற்கிடையில் தான், மலேஷிய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார் ஜோசப். பின், தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்தே வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஜோசப் சிக்கினார்.
தமிழகத்தில் உள்ள அந்த வி.ஐ.பி., வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக தான், வெளிநாட்டில் இருந்து ஹவாலா வாயிலாக பணம் கொண்டுவர திட்டமிட்ட விபரமும், வெளியாகி இருக்கிறது. மேற்கொண்டும் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடக்கிறது. அடுத்தடுத்த கட்டங்களுக்கு விசாரணை நகரும்போது, தமிழகத்தில் இருக்கும் அரசியல் வி.ஐ.பி.,க்கள் விசாரணை வளையத்துக்குள் வரலாம்.
தற்போது வருவாய் புலனாய்வுத் துறையுடன் இணைந்து வருமான வரித் துறையும் விசாரித்து வருகிறது. இதில் சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான விபரங்கள் இருப்பதால், விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து