பழனிசாமி கை காட்டுபவரே பிரதமர்: பிரேமலதா கணிப்பு
"தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை தி.மு.க.,வும் நிறைவேற்றவில்லை. பல எம்.பி.,க்களை தொகுதி மக்களே விரட்டியடிக்கும் சூழல் தான் உள்ளது" என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எதிக்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தாவும் தனித்து தான் போட்டியிடுகிறார். அவரின் பிரதமர் வேட்பாளர் யார்?
பழனிசாமி கையை காட்டுபவர் பிரதமராக வர வாய்ப்புள்ளது. எங்கள் கூட்டணியில் அனைத்து எம்.பி.,க்களும் வெற்றி பெற்று தமிழகத்துக்கு தேவையானதை நிச்சயம் பெற்றுத் தருவார்கள். 'நாடும் நாங்கள் தான். நாற்பதும் நாங்கள் தான்' என்பதில் உறுதியாக இருக்கிறோம். விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் பிரசார நோட்டீஸை கொடுத்து கையெழுத்தை வாங்கியுள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்துள்ளோம். 10 வருடம் எம்.பி., ஆக இருந்தவருக்கு இதுகுறித்த அடிப்படை புரிதல் கூட இல்லை. இதற்காகவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
'10 வருடங்கள் விருதுநகர் எம்.பி.,யாக இருந்தும் எந்த வாக்குறுதிகளையும் மாணிக்கம் தாகூர் நிறைவேற்றவில்லை' என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கான வரியையாவது குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை தி.மு.க.,வும் நிறைவேற்றவில்லை. பல எம்.பி.,க்களை தொகுதி மக்களே விரட்டியடிக்கும் சூழல் தான் உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போதைப் பழக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் தி.மு.க., மீது கோபத்தில் உள்ளனர்.
விஜயகாந்துக்கு எப்படி விருதுநகர் தொகுதி முதல் வெற்றியை தந்ததோ, அதேபோல் விஜய பிரபாகரனுக்கு வெற்றியைத் தேடி தரும். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என பா.ஜ., தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து