எம்.பி., நிதி சர்ச்சை: பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு
தொகுதி மேம்பாட்டு நிதி விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "இந்த தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஒருவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். அவரிடமும் பணமும் அதிகாரமும் இருக்கிறது. தனது சொத்துகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் மேலும் சொத்துகளை அதிகப்படுத்திக் கொள்ளவும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் தன்னுடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவழிக்கவே இல்லை. அப்படியானால் அவர் எப்படி செயல்பட்டிருப்பார் என நீங்களே எண்ணிப் பாருங்கள்" என்றார்.
பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தயாநிதி மாறன் கூறியதாவது:
தி.மு.க., தாக்கிப் பேச வேண்டும் என்பதற்காக பழனிசாமி ஏதோ பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதியை 95 சதவீதம் செலவழித்துள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியாக எனக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.17 கோடி. அதில் மீதம் இருப்பது 17 லட்சம் தான்.
எனது பணியை கொச்சைப்படுத்தி மக்கள் மத்தியில் அவதூறை ஏற்படுத்தும் வகையில் பழனிசாமி பேசியுள்ளார். தன் பேச்சுக்கு 24 மணிநேரத்தில் பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடர்வேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
தயாநிதி மாறனின் எச்சரிக்கைக்கு அ.தி.மு.க., தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் எழும்பூர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாசகர் கருத்து