மோடி தமிழகம் வருவதால் எந்தப் பயனும் இல்லை: பழனிசாமி
"தி.மு.க., ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதையெல்லாம் தி.மு.க., அரசு கட்டுப்படுத்தவில்லை.
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும் தேர்தல் அறிக்கையை முழுதாக நிறைவேற்றவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை.
ஆனால், 2014ம் ஆண்டுக்கு முன்பு வரையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைத்தனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது.
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை பா.ஜ., அரசு முறையாக வழங்குவதில்லை. வெள்ள பேரிடர் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தருவதில்லை.
மாநிலங்களுக்கான பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், ஓட்டுகளை குறிவைத்து மோடி பேசி வருகிறார்.
தி.மு.க., ஆட்சியின் நிர்வாக திறமையின்மையால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது இழுபறி என்ற நிலை ஏற்பட்டால், யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்ச நீதிமன்ற உத்தரவுகளையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பலன்?
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து