கருத்து கணிப்பு: பழனிசாமி கண்டனம்
'கருத்து திணிப்பு வஞ்சக முயற்சிகள், நம்மை சோர்வடைய செய்யும் என, எதிரிகள் பகல் கனவு காண்கின்றனர். ஆனால், தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் உள்ளது. எட்டு திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது. அந்த வெற்றியை ஓட்டுகளாக மாற்ற, தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றுங்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதம்:
ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாக திரட்டிய பெரும் பண மூட்டையுடனும், தி.மு.க., தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது. தி.மு.க., அரசின் அராஜகப் போக்கும், அக்கிரம செயல்களும் மெல்ல தலைதுாக்க துவங்கி விட்டன.
அ.தி.மு.க., என்னும் வயலில் இருந்த களைகள் எல்லாம் பிடுங்கி எறியப்பட்டு, அருமையான வெள்ளாமைக்கு நாம் தயாராக இருக்கிறோம்.
தொடர்பு இல்லை
பா.ஜ., தேசிய கட்சியாக இருந்தாலும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கி, நம்மை குறித்து பொய் பிரசாரம் செய்வதையே, தங்களின் முழு நேர தேர்தல் பிரசாரமாக்கி கொண்டிருக்கிறது. நம் கட்சியை பிளவுபடுத்த, அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து, இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம்.
பா.ஜ., சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து, நம்மை சீண்டி வருகிறது. அக்கட்சியும், அதன் நியமனத் தலைவர்களும், அ.தி.மு.க., தொண்டர்கள் பலத்தை உணர்ந்து கொள்ள, இந்தத் தேர்தலில், அவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்கும் வகையில், ஜெயலலிதா காட்டிய பாதையில் தயங்காமல் செயல்படுங்கள்.
சில ஊடகங்களையும், பத்திரிகைகளையும் மிரட்டி தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கும், மத்திய, மாநில ஆளுங்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்ற பெயரில், ஒரு கருத்து திணிப்பை தேர்தலுக்கு தேர்தல் நடத்துகின்றனர். இந்த கருத்துக் கணிப்புகள், அவர்களின் கற்பனை என்பதையும், கள நிலவரத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பதையும், கடந்த கால நிகழ்வுகள் நமக்கு காட்டியுள்ளன.
பகல் கனவு
கருத்து திணிப்பு வஞ்சக முயற்சிகள், நம்மை சோர்வடைய செய்யும் என, எதிரிகள் பகல் கனவு காண்கின்றனர். ஆனால், தேர்தல் களம் நமக்கு சாதகமான நிலையில் இருப்பது, நம் அனைவருக்கும் தெரியும். எட்டு திசைகளிலும் நம் வெற்றி முழக்கம் ஒலிக்கிறது. அந்த வெற்றியை சிந்தாமல், சிதறாமல் ஓட்டுகளாக மாற்ற, தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து