அடிமையாக இருக்க பார்க்கிறீர்கள்: பா.ம.க.,வை சாடிய பழனிசாமி
"பா.ம.க.,வுக்கு எப்போதெல்லாம் சாதகமான நிலை தேவைப்படுகிறதோ, அப்போதெல்லா மற்ற கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். மக்களைப் பற்றி எதுவும் சிந்திக்கமாட்டார்கள்" என அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.
தருமபுரி அ.தி.மு.க., வேட்பாளர் அசோகனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
எங்களுடன் கூட்டணியில் 2ம் இடத்தில் பா.ம.க.,வும் 3வது இடத்தில் பா.ஜ., வும் இருந்தது, இந்த முறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளனர். தற்போது 5ம் இடத்தில் பா.ம.க., உள்ளது. அவர்கள் நிலைமை எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட்' என அன்புமணி சொல்கிறார். அ.தி.மு.க., ஓட்டு போட்டதால் தான் அவர் எம்.பி., ஆனார். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டால் நன்மை மட்டுமே கிடைக்கும்.
எங்கள் கூட்டணியில், 'பிரதமர் வேட்பாளரே இல்லையே' என்கின்றனர். 5 வருடம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அன்புமணி ஒரு திட்டத்தையாவது கொண்டு வந்தாரா. தமிழக மக்கள் பயன் பெறுவதற்கு ஏதேனும் செய்தாரா?
நீங்கள் எல்லாம் அடிமையாக இருப்பதற்கு பார்க்கிறீர்கள். நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு ஆட்சி அதிகாரம் தேவையில்லை. மக்கள் தான் முக்கியம்.
மக்களின் குரல் பார்லிமென்ட்டில் ஒலிக்க வேண்டும். மக்கள் பிரச்னையை எடுத்துப் பேச வேண்டும் என்றால் தனித்து தான் போட்டியிட வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வதற்காக பா.ம.க., கூட்டணி வைக்கவில்லை, அவர்கள் அடிக்கடி கூட்டணி மாறிக் கொண்டே இருப்பார்கள்.
'எங்கள் கோரிக்கைகளை பழனிசாமி நிறைவேற்றவில்லை' என பா.ம.க., கூறுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது நான் தான். இதை யாரும் மறைக்க முடியாது.
இதற்காக குழு அமைக்க உத்தரவிட்டதும் நான் தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தி.மு.க., இதை முன்னெடுக்கவில்லை. எங்களை பற்றி விமர்சனம் செய்ய அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.
கல்வி, குடிநீர், சாலைவசதி என அடிப்பவை வசதிகளை மேம்படுத்தியது அ.தி.மு.க., ஆட்சியில் தான். நீட் தேர்வை அமல்படுத்திய பா.ஜ.,வுடன் தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.
பா.ம.க.,வுக்கு எப்போதெல்லாம் சாதகமான நிலை தேவைப்படுகிறதோ, அப்போதெல்லா மற்ற கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். மக்களைப் பற்றி எதுவும் சிந்திக்கமாட்டார்கள்.
மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம், தி.மு.க.., ஆட்சி தான் நாட்டிலேயே நம்பர் ஒன் ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். ஊழல் செய்வதில் தான் அவர்கள் நம்பர் ஒன்.
அ.தி.மு.க., ஆட்சியில் இருமுறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை ஸ்டாலின் தந்தார். அதைக் கூட நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை அவர் ஏமாற்றிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்,
வாசகர் கருத்து