மகனுக்கு சீட் தராததால் மனவருத்தமா: அப்பாவு கொதிப்பு
"என் மகனுக்கு சீட் கொடுங்கள் என்ற தி.மு.க., தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவுக்கு நான் விவரம் அறியாதவன் அல்ல" என, தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியை தொகுதிப் பங்கீடு ஒதுக்கீட்டின் போது காங்கிரசுக்கு தி.மு.க., தலைமை ஒதுக்கியது. இங்கு காங்கிரஸ் சார்பாக ராபர்ட் புரூஸ் என்பவர் போட்டியிடுகிறார்.
முன்னதாக, திருநெல்வேலி தொகுதியை குறிவைத்து தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். 'சிட்டிங் தி.மு.க., எம்.பி., ஞானதிரவியத்தின் மீது அதிருப்தி இருப்பதால், எளிதாக சீட் பெற்றுவிட முடியும்' என அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு சீட்டை ஒதுக்கியதில் நெல்லை மாவட்ட தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தனது மகன் அலெக்ஸுக்கு சீட் கொடுக்கப்படாததால், சபாநாயகர் அப்பாவு மனவருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அப்பாவு கூறியதாவது:
நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது என்பது தலைமை எடுத்த முடிவு. அங்கு எனது மகனுக்கு சீட் கொடுக்காததால் நான் வருத்தத்தில் இருப்பதாக வெளியான தகவல் தவறானது. அப்படி எந்த வருத்தமும் எனக்கு இல்லை.
நெல்லையில் போட்டியிட அறிவாலயத்தில் 44 பேர் விருப்ப மனுக்களை கொடுத்தனர். அங்கு எவ்வளளோ பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போது சில மாதங்களுக்கு முன்பு மாணவரணி செயலாளர் ஆன என் மகனுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்?
என் மகனுக்கு சீட் கொடுங்கள் என்ற தி.மு.க., தலைவரை சந்தித்து அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவுக்கு நான் விவரம் அறியாதவன் அல்ல. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.
எதற்காக இப்படியொரு அவதூறு செய்தி பரப்பப்படுகிறது எனத் தெரியவில்லை. பா.ஜ.,வுக்கு எதிராக இண்டியா என்ற கூட்டணி உருவாகக் காரணமே தி.மு.க., தலைவர் தான். ஆனால், தேர்தல் நேரத்தில் என்னைப் பற்றி தவறாக எழுதியுள்ளனர்.
இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
வாசகர் கருத்து