இண்டியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டேனா: நடிகை குஷ்பு கொதிப்பு
'லோக்சபா தேர்தலில் இந்தியாவுக்கு ஓட்டுப் போடுங்கள்' எனக் குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பா.ஜ., நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் வாக்குச்சாவடி சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன்பின், அங்கிருந்தபடியே குடும்பத்தினருடன் செல்பி எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்தார்.
அதில், #Vote4india என அவர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே ஹேஸ்டேகை கடந்த சில வாரங்களாக இண்டியா கூட்டணிக் கட்சியினர் பயன்படுத்தி வந்தனர். அப்படியிருக்கும் போது, குஷ்புவின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, லோக்சபா தேர்தலில் தீவிர பிரசாரம் நடந்து கொண்டிருக்கும் போது உடல்நிலையை காரணம் காட்டி நடிகை குஷ்பு பிரசாரம் செய்யவில்லை.
வேலூர் பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக குஷ்புவின் கணவர் சுந்தர்.சி மட்டும் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரம் முடியும் வரையில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் மட்டுமே குஷ்பு கருத்து தெரிவித்து வந்தார்.
இந்தநிலையில், குஷ்புவின் எக்ஸ் தள பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரின் பதிவுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவது பா.ஜ.,வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:
நான் எதைச் செய்தாலும் அதை பிரச்னையாக்க வேண்டும் எனக் காத்திருக்கிறார்களா. இந்தியா என்பது நமது நாடு தானே. இதற்கு முன்பு பதிவிடும்போதெல்லாம் இப்படிப்பட்ட பிரச்னைகள் எதுவும் வரவில்லை.
நமது நாட்டின் பெயர் இந்தியா. அதைப் பதிவிடுவதில் எந்தக் குழப்பமும் இல்லை. என் நாட்டை இந்தியா என அழைக்கிறேன். எதிர்க்கட்சி கூட்டணியின் பெயர் இண்டியா. அதில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் புள்ளி இருக்கும். நான் பதிவிட்டதில் புள்ளி இல்லையே?
நான் எதைச் செய்தாலும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று குழப்புகிறார்கள். ஆனால், நான் தெளிவாக இருக்கிறேன். நான் பா.ஜ.,வில் இருக்கிறேன். என்னுடைய சமூகவலைதள பக்கத்தில் 'மோடி பரிவார்' என இருக்கிறது.
இதைப் பார்த்துவிட்டு சற்று அறிவுடன் செயல்பட வேண்டும். இண்டியா என்ற பெயரை மக்களை ஏமாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் வைத்துள்ளார்களா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து