முத்தரையர்கள் ஓட்டு அமைச்சர் மகனுக்கு சிக்கல்
தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலரிடம் மோதல் போக்கால், முத்தரையர்கள் ஓட்டு அமைச்சர் நேரு மகனுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு, பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்காக அமைச்சர் நேரு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க.,வில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் 'சீட்' தரவில்லை என்பதால், பெரம்பலுார் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்தரையர் சமுதாயத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் நேரு, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலருடன் மோதியுள்ளார். அது முத்தரையர் சமுதாயத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணச்சநல்லுார் பகுதியில் அமைச்சர் நேரு, மகனுக்கு ஓட்டு கேட்டு சென்றார். அப்போது, முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலர் ஆனந்தனிடம் 'முத்தரையர்களை என் மகனுக்கு ஓட்டுப்போட வேண்டாம்னு சொல்றீயாமே' என்று கேட்டுள்ளார்.
இதை சீரியஸாக எடுத்துக் கொண்ட ஆனந்தன், 'ஆமாம். சொல்லியிருக்கிறேன்' என்று சொல்ல, நேரு, 'உன் ஊரில் தானே ஓட்டுகளை தடுக்க முடியும்' என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆனந்தன், 'முத்தரையர் யாரையும் ஓட்டளிக்க விடமாட்டேன்' என்று சொல்லிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், ஆனந்தனின் ஊரான சுனைபுகநல்லுாரில், ஓட்டு கேட்கச் சென்ற நேரு, அமைதியாக திரும்பி விட்டார். இதனால், முத்தரையர் ஓட்டு அருணுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து