தி.மு.க.,வின் உண்மை முகம் சமூக அநீதி தான்: ராமதாஸ் கொதிப்பு

"வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தி.மு.க., அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு" என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

அதன்பின் இருமுறை நீட்டிக்கப்பட்ட தலா 6 மாத காலக் கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனாலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022ம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம்.

ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17ம் தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.01.2023ல் தான் வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி ஆணையம் 3 மாதங்களுக்குள், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதிக்குள் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு குறித்த தரவுகளை ஆய்வு செய்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பது கடினமல்ல. அது ஒரு சில வாரங்களில் முடிவடையக் கூடிய பணி தான்.

ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தி.மு.க., அரசு விரும்பவில்லை. சமூகநீதி வேடம் போடும் தி.மு.க.,வின் உண்மை முகம் சமூக அநீதி தான் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தி.மு.க., அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பா.ம.க., தயாராகத் தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்