இனிமேலா ஸ்டாலின் செய்யப் போகிறார்: பழனிசாமி கொதிப்பு
"தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வாக்குறுதியைக் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நிறைவேற்றவில்லை" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 3 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வாக்குறுதியைக் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நிறைவேற்றவில்லை.
மாறாக தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், செவிலியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் என்று பலரை பணியிட மாற்றம் செய்தும், போராடியவர்களை கைது செய்தும் தனது கோர முகத்தைக் காட்டியது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தவறியதோடு, ஒவ்வொரு அகவிலைப்படி உயர்வினையும் 6 மாத கால தாமதமாக அறிவித்து பணப்பயன் இல்லாமல் தி.மு.க., அரசு வழங்கியது.
இந்நிலையில், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் நிதிநிலை சீராகும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு 'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற சொல்லாடலை நினைவுபடுத்துகிறது. இதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள்.
இந்திய அளவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக புதிய சம்பள உயர்வை அமல்படுத்திய முதல் மாநிலம் என்பதோடு, ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை முன் தேதியிட்டு, பணப்பயனுடன் வழங்கியது அ.தி.மு.க., அரசு தான்
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் செய்யாததையா இப்போது தேர்தல் முடிந்ததும் செய்யப் போகிறார்கள். நான் மேடைதோறும் சொல்வது போல, 'ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்' என்ற சதுரங்க வேட்டை பாணியை தனது கொள்கையாக வைத்திருக்கிறார், ஸ்டாலின்.
தி.மு.க.,வின் தொடர் நாடகத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மயங்க மாட்டார்கள். இதற்கான தக்க பாடத்தை வரும் லோக்சபா தேர்தலில் புகட்டுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து